S.A.Chandrasekhar - விஜய்யின் அப்பா ஏமாற்றிவிட்டார் - விஜயகாந்த் மேனேஜர் குற்றச்சாட்டு
சென்னை: S.A.Chandrasekhar (எஸ்.ஏ.சந்திரசேகர்) இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் 15 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக விஜயகாந்த்திடம் மேனேஜராக இருந்தவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். பல ஹிட் படங்களை கொடுத்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயாகாந்துடன் மட்டும் 19 படங்கள் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். இந்தச் சூழலில் எஸ்.ஏ.சி தன்னை ஏமாற்றிவிட்டதாக விஜயகாந்த்திடம் மேனேஜராக இருந்த சுப்பையா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

சுப்பையாவின் குற்றச்சாட்டு: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "1981ஆம் ஆண்டு முதல் விஜயகாந்தின் உதவியாளராக 75 படங்களில் வேலை செய்துள்ளேன். அதில் எஸ்.ஏ.சந்திரசேகரின் சில படங்களும் அடக்கம். அப்போதுதான் சந்திரசேகருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த படங்களுக்கு மேனேஜராக என்னை விஜயகாந்த் நியமித்தார். கேப்டன் பிரபாகரன் முதல் உளவுத்துறை வரை பல படங்களில் வேலை செய்தேன். ஒருகட்டத்தில் நான் தயாரிப்பாளராக ஆசைப்பட்டேன்.
விஜயகாந்த்தை கெஸ்ட் ரோலில் போட்டு ஒரு படத்தை எடுக்க முடிவு செய்தேன். விஜயகாந்த் சம்மதம் சொல்ல எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசினேன். அப்போது அவர் விஜய்யை வைத்து படங்கள் எடுத்து நஷ்டத்தில் இருந்தார். மேலும், செந்தூரபாண்டிக்கு விஜயகாந்திடம் தேதிகள் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தார். நான்தான் அவரை விஜயகாந்திடம் அழைத்து சென்றேன். கெஸ்ட் ரோலில் விஜயகாந்த் கொஞ்சம் யோசித்தபோது எஸ்.ஏ.சி கேட்டால் நீங்கள் கெஸ்ட்ரோலில் நடிக்கலாம் என சொன்னேன். அதன்பின் விஜயகாந்த்தும் சம்மதம் சொன்னார்.
சம்பளத்தை உயர்த்தினார்: அதன்பின் நான் தயாரிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அப்போது அறிமுகமான சூர்யா ஹீரோ, விஜயகாந்த் கெஸ்ட் ரோல் என பெரியண்ணா படம் உருவானது. அதற்கு முன் 7 லட்சம் சம்பளம் வாங்கிய எஸ்.ஏ.சி. என் படத்திற்கு 20 லட்சம் சம்பளம் கேட்டார். சரி. எல்லாவற்றுக்கும் உதவி செய்வார் என நினைத்து ஒத்துக்கொண்டேன். அதன்பின் பூஜை போட்டவுடன் எல்லா ஏரியாவும் படம் விற்றுவிட்டது.

லாபத்திலும் பங்கு கேட்டார்: படத்தின் லாபத்தில் எனக்கு மேலும் 20 லட்சம் வேண்டும் என்றார். அதற்கும் நான் ஒத்துக்கொண்டேன். படப்பிடிப்பு துவங்கும் நேரத்தில் அவரின் மனைவி ஷோபாவை விட்டு 'அவருக்கு உடல் நலம் சரியில்லை. எனவே, அவரின் உதவியாளர்களை வைத்து எடுத்து கொள்ளுங்கள். அவர் ஐடியா மட்டும் கொடுப்பார்' என சொல்ல வைத்தார். அதற்கும் ஒத்துக்கொண்டேன்.
படம் முடிந்து பெரிய ஹிட் ஆனது. சென்னையில் சில ஏரியாக்களை அவரே விற்றார். எனக்கு 20 லட்சம் மதிப்பில் ஒரு வீடும், என் குழந்தைகளின் பெயரில் ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்துவிடுங்கள் என எஸ்.ஏ.சியிடம் விஜயகாந்த் சொன்னார். ஆனால் அவரோ ஷோபாவின் பெரியப்பா மகன் நடத்தும் ஏ.பி.சி. பிரைவேட் லிமிட்டட் எனும் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் டெப்பாசிட் செய்கிறேன் என்றார்.

ஏமாற்ற ஆரம்பித்தார்கள்: நான் அதை ஏற்கவில்லை. அதற்கு நானும் அதில் டெபாசிட் செய்துள்ளேன். மாதா மாதம் வட்டி தருகிறார்கள். உன் பணத்திற்கு நான் கேரண்டி என்றார். எனவே, சம்மதம் சொன்னேன். முதல் மாதம் மட்டும் 30 ஆயிரம் வட்டி கொடுத்தார்கள். அதன்பின் 15 ஆயிரம் கொடுத்தார்கள். எனக்கு புரிந்துவிட்டது. என் பணத்தை திருப்பி கேட்டேன். சரி அந்த பணத்தை நானே கொடுக்கிறேன் என்றார்.
ஆனால், பல வருடங்களாக அலைந்தும் அவரிடம் பணம் வாங்க முடியவில்லை. இப்போது என்னை சந்திக்கவே மறுக்கிறார். அவரின் வீட்டுக்கு சென்றால்கூட என்ன உள்ளே அனுமதிக்கவில்லை. அவரை நம்பி என் மகளின் திருமணத்தை நடத்தினேன். கடந்த 25ஆம் தேதி திருமணம் முடிந்துவிட்டது. கடன் வாங்கித்தான் என் மகள் திருமணத்தை நடத்தினேன். இப்போதும் அவர் பணத்தை கொடுக்கவில்லை.
விஜயகாந்த் மட்டும் இருந்திருந்தால்: காவல் நிலையத்தில் புகாரளிக்க நான் விரும்பவில்லை. அவர் மனசாட்சிபடி நடந்து கொண்டால் போதும். விஜயகாந்த் இப்போது ஆக்டிவாக இருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்" என்றார்.


Click it and Unblock the Notifications











