Vijayakanth: "விஜயகாந்துக்கு என்ன நடந்துச்சுன்னு மறைச்சுட்டாங்க.." கண்ணீர்விட்ட மன்சூர் அலிகான்!
சென்னை: கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற இதில் கமல்ஹாசன், சரத்குமார், நாசர், விஷால், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மன்சூர் அலிகான், விஜயகாந்த் இறப்பதற்கு முன்பு அவரது உடல்நிலை குறித்து சந்தேகத்துடன் வேதனையை வெளிப்படுத்தினார்.
கண்ணீர்விட்ட மன்சூர் அலிகான்
கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக் கலைஞர், கேப்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விஜயகாந்த், கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் தவிர பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டு விஜயகாந்த் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விஜயகாந்தால் திரையுலகில் அறிமுகமான மன்சூர் அலிகானும் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் என்ற கேரக்டரில் நடித்த மன்சூர் அலிகான், அதன்பின்னர் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக மாஸ் காட்டினார். விஜயகாந்துடன் பல படங்களில் நடித்துள்ளதோடு, எப்போதும் அவரின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் வலம் வந்தார். இந்நிலையில் கேப்டன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசினார் மன்சூர் அலிகான்.
அதில், "திரையுலகில் மட்டுமில்லை எப்போதுமே விஜயகாந்த் ஒரு மாமனிதனாக வாழ்ந்து காட்டியவர். நானெல்லாம் நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடியே செத்துப் போய்ட்டேன்.. எப்போ கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் மோசமானதோ... அப்போதே நாங்க செத்துட்டோம்" என்றார். மேலும், "விஜயகாந்த் உடல்நலம் மோசமாகி அது என்ன ட்ரீட்மெண்ட்... என்ன ஏதுன்னு எந்த விவரமும் சொல்லப்படல... அதுல சில மன வருத்தங்கள் இருக்கு... அத இங்க பேச வேண்டாம்... ஆனால், என்னால் அதெல்லாம் தாங்க முடியல... அவ்ளோ வேதனையா இருக்கு.." என மேடையிலேயே பேசினார்.
மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்தே இது மாதிரியான விமர்சனங்களை ரசிகர்கள் கூறி வந்தனர். அதேநேரம் விஜயகாந்தின் குடும்பத்தினர் அவரை நன்றாக தான் பார்த்துக்கொண்டார்கள் எனவும் கேப்டனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினரை வைத்துக்கொண்டே தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் மன்சூர் அலிகான்.


Click it and Unblock the Notifications











