Vijayakanth: "இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது..” விஜயகாந்த் நினைவிடத்தில் டென்ஷனான மைக் மோகன்
சென்னை: தமிழ் சினிமாவில் சில்வர் ஜூப்ளி ஹீரோவாக வலம் வந்தவர் மோகன். 1980, 90களில் உச்ச நடிகராக மாஸ் காட்டிய மோகன் தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மைக் மோகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர், இன்று கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
கேப்டன் நினைவிடத்தில் மோகன் அஞ்சலி
1980களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் மைக் மோகன். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் டஃப் கொடுத்த மோகன், பல சிலவர் ஜுப்ளி படங்களில் நடித்துள்ளார். இதனால் அவருக்கு சில்வர் ஜுப்ளி நாயகன் என்றே ரசிகர்கள் செல்லப் பெயர் வைத்து கொண்டாடினர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் விஜய்யின் கோட் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார் மோகன்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மோகன் தான் மெயின் வில்லன் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் சென்ற மோகன், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பிரேமலதா விஜயகாந்துடன் இணைந்து அன்னதானமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேப்டன் விஜயகாந்த் பற்றி பேசினார்.

இருக்கும் இடமெல்லாம் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். அவரிடம் எனக்குப் பிடித்ததே அந்த முரட்டு தைரியம் தான். நடிகராக மட்டும் இல்லாமல் பொது வாழ்விலும் அவர் கேப்டன் தான். விஜயகாந்தின் நண்பராக இருந்ததில் ரொம்பவே பெருமைபடுறேன். அவர் இருக்கும் போது எப்படியோ அப்படியே இப்போதும் விஜயகாந்த் பெயரால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

விஜயகாந்த் இறந்த பின்னரும் இந்த அன்னதானம் கொடுக்கப்படுவதும் பெருமையான விஷயம் என்றார். தினமும் இப்படி அன்னதானம் வழங்குவது எல்லாம் ரொம்பவே பெரிய விஷயம், இதெல்லாம் பார்க்கும் போது அவர் மீதான மரியாதை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. விஜயகாந்த் நினைத்ததை அவரது குடும்பத்தினர் தொடர்ந்து செய்ய வேண்டும் என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் எனக் கூறினார்.

அப்போது விஜயகாந்துடன் நடித்தது பற்றிய அனுபவங்களை கூற முடியுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மோகன், அப்படி சொல்ல நிறையவே இருக்கிறது, ஆனால் அதையெல்லாம் சொல்ல வேண்டிய மேடை இது கிடையாது. அதனை தனியாக ஒருமுறை பேசுகிறேன் என விடை பெற்றார். ஆனாலும் செய்தியாளர்கள் அதே கேள்வியை கேட்க, பதிலே கூறாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் மைக் மோகன்.


Click it and Unblock the Notifications











