Vijayakanth: MGR-க்கு அடுத்து விஜயகாந்த்.. எல்லாருக்கும் வயிறார சாப்பாடு.. சொக்கத்தங்கம்யா கேப்டன்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 71. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜயகாந்த், தமிழ்த் திரையுலகின் கறுப்பு எம்ஜிஆர் என கொண்டாடப்பட்டார். வீடாக இருந்தாலும் தனது அலுவலகமாக இருந்தாலும் தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் சாப்பாடு போட்டு பாசம் காட்டுவதில் கேப்டனை மிஞ்ச ஆளே கிடையாது ஏனென்று தெரியுமா.
எம்ஜிஆருக்கு அடுத்து கேப்டன் தான்
தமிழில் உச்ச நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமா பின்னணியே இல்லாமல் தனது கடின உழைப்பால் உச்ச நடிகராக மாஸ் காட்டினார். மதுரையில் ரைஸ்மில் தொழில் செய்து வசதியாக வாழ்ந்து வந்த விஜயகாந்த், சினிமாவின் மீது இருந்த அதீத ஆர்வத்தால் சென்னை வந்தார். முன்னணி ஹீரோவாக வருவதற்காக பல தடைகளையும் அவமானங்களையும் சந்தித்தவர் விஜயகாந்த்.

ஒருகட்டத்தில் உச்ச நடிகராக மாறியதும் விஜயகாந்த் ரொம்பவே மாறிவிட்டார். அதாவது மற்றவர்கள் பந்தா காட்டும் போது, விஜயகாந்த் மட்டும் ரொம்பவே எளிமையாகவும் இன்முகத்தோடும் பழகியுள்ளார். அதெல்லாம் விட ரொம்பவே முக்கியமானது, தன்னை சந்திக்க வரும் யாரும் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
முன்பெல்லாம் ராமாபுரம் தோட்டத்தில் இருந்த எம்ஜிஆரை சந்திக்க செல்லும் யாரும் சாப்பிடாமல் வெளியே செல்ல முடியாதாம். யாராக இருந்தாலும் முதல் சாப்ட்டீங்களா எனக் கேட்டு அவர்களுக்கு வயிறார உணவு கொடுப்பது தான் எம்ஜிஆரின் வழக்கம். இதற்காக ராமாபுரம் தோட்டத்தில் எப்போதும் உணவு சமைத்துக்கொண்டே இருப்பார்களாம். அவருக்குப் பின்னர் விஜயகாந்த் தான் கருப்பு எம்ஜிஆராக வாழ்ந்துள்ளார்.
அதாவது, விஜயகாந்த் அறிமுகமான புதிதில் ஆளும் பார்க்க ரொம்ப கருப்பாக இருந்ததால் படப்பிடிப்பு தளத்தில் யாருமே அவரை மதிக்க மாட்டார்களாம். பெரிய ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடிக்கும் போது கூட, விஜயகாந்துக்கு சுத்தமாக மரியாதை இருக்காதாம். ஹீரோவாக இருந்தாலும் விஜயகாந்துக்கு மரியாதை கிடைக்காத நிலையில், அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கூட பாதியிலேயே எழுப்பி நடிக்க சொல்வார்களாம்.
அப்போது ஹீரோயினுக்கு ஸ்பெஷல் சாப்பாடு, விஜயகாந்துக்கு சாதாரண சாப்பாடு என வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது. இதனால் ரொம்பவே வருத்தப்பட்ட விஜயகாந்த், அவர் முன்னணி நடிகராக வளர்ந்ததும் தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளரிடம் கண்டிஷனாக போட்டுள்ளார். அதாவது விஜயகாந்துக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறார்களோ அதுதான் ஹீரோயின் முதல் லைட் மேன்கள் வரை அனைவருக்கும் வழங்கப்படுமாம்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் தான் இப்படி என்றால், வீட்டிலும் தனது அலுவலகத்திலும் கூட தன்னை சந்திக்க யார் வந்தாலும் சாப்பாடு போட்டு அனுப்பிவைப்பாராம். நண்பர்கள், சக நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என யார் சென்றாலும் வீட்டிற்கு வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு தான் வழியனுப்பி வைப்பாராம் விஜயகாந்த். இன்னொரு பக்கம் விஜயகாந்த் அலுவலகத்திலும் உணவு சமைத்துகொண்டே இருப்பார்களாம்.
ஏராளமான உதவி இயக்குநர்கள், நடிக்க சான்ஸ் தேடி சென்னை வந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்த் அலுவலகம் சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அங்கு செல்வார்களாம். அப்படியாக விஜயகாந்த் அலுவலகம் சென்று சாப்பிட்டவர்களில் பலரும் இப்போது இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் வலம் வருகின்றனர். கருப்பு எம்ஜிஆர் என விஜயகாந்தை பலரும் பாராட்டுவது இந்த செயலால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இலங்கை அகதிகள் முகாம்களுக்கும் தொடர்ந்து மூட்டை மூட்டையாக அரிசி, பருப்புகளை கொடுத்தும் அதிகமாக உதவி செய்தவர் கேப்டன் விஜயகாந்த்.


Click it and Unblock the Notifications











