Vijayakanth: "சாதிய வர்க்கத்துக்கு எதிராக திமிராக சண்டை செய்தவர்” விஜயகாந்துக்கு பா ரஞ்சித் அஞ்சலி
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயகாந்த், நேற்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். சினிமா, அரசியல் என இரு பக்கமும் தனது பலம் என்னவென்பதை நிரூபித்தவர் கேப்டன். அவருக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற பா ரஞ்சித், "விஜயகாந்த் சதிய வர்க்கத்துக்கு எதிராக திமிருடன் சண்டை செய்தவர்" என புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
விஜயகாந்துக்கு பா ரஞ்சித் அஞ்சலி: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் விஜயகாந்த். மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து விஜயகாந்த் உடலுக்கு விஜய், இளையராஜா, சத்யராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நேரில்ா சென்று அஞ்சலி செலுத்தினர். இவர்களது வரிசையில் இயக்குநர் பா ரஞ்சித்து விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், எனது ஊரில் இருந்த விஜயகாந்த் மன்றத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். அவருடைய படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவர் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நிறைய பேசியுள்ளார். ஏழை ஜாதி படம் பார்க்கும் போதெல்லாம் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒருவர் அதெல்லாத்தையும் விட்டுட்டு ஏழை மக்களுக்காக பேசியது பெரிய விஷயம். இதேபோல் நிறைய படங்களில் விஜயகாந்த் நடித்ததை நான் ரசித்திருக்கிறேன். சினிமா, அரசியலில் அவரது பவர் அசாத்தியமானது.

விஜயகாந்தின் மறைவு எனக்கு மிகப் பெரிய வலியை கொடுத்துள்ளது. அவர் சினிமா மட்டுமின்றி அரசியலில் மிகப் பெரிய ஆளுமையாக இருந்தார். சாதிய வர்க்கத்துக்கு எதிராக ரொம்பவே திமிராக சண்டை போட்டவர் விஜயகாந்த். எங்கள் ஊரில் விஜயகாந்த் பெயரில் மன்றம் தொடங்கிய போது அவர் நேரில் வந்ததும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் மறக்க முடியாது. எனது அப்பாவிற்கும் விஜயகாந்தை ரொம்பவே பிடிக்கும்.
விஜயகாந்த் போன்ற ஆளுமையை நாம் இழந்துவிட்டது நமக்கு பெரிய இழப்பு தான். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பா ரஞ்சித் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











