Vijayakanth - உயிரிழந்தார் விஜயகாந்த்.. வசதியான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு வளர்ந்தவர்.. ஒரு ரீவைண்ட்
சென்னை: நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. விஜயகாந்த்தின் மறைவு ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. இந்த சூழலில் அவர் குறித்து இதில் பார்க்கலாம்.
மதுரையில் கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கே.என்.அழகர்சாமிக்கும், ஆண்டாளுக்கும் மகனாக விஜயராஜ் பிறந்தார். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் சினிமாவில் நடித்து வெல்ல வேண்டும் என்பது அவரது தீவிரமான ஆசை. இதனையடுத்து திறமையையும், நண்பர் இப்ராஹிம் ராவுத்தரையும் துணைக்கு வைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்.

இனிக்கும் இளமை: சினிமாவுக்காக விஜயராஜிலிருந்து விஜயகாந்த்தாக மாறினார். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் 1979ஆம் ஆண்டு இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார் விஜயகாந்த்.
தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு அதே ஆண்டு வெளியான அகல் விளக்கு, நீரோட்டம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் 1980ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இதனையடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
முன்னணி ஹீரோ: தூரத்து இடி முழக்கம் வெற்றி பெற்றதை அடுத்து சட்டம் ஒரு இருட்டறை, வெற்றி, நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா, நானே மந்திரி, எங்கள் குரல், அமுதகானம், ஊமை விழிகள், சிறை பறவை, கூலிக்காரன், மனதில் உறுதி வேண்டும், உழவன் மகன், மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ், பூந்தோட்ட காவல் காரன், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை என வரிசையாக ஹிட்டடித்தார். இதனால் ஒரு வருடத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் பிஸியான நடிகர் ஆனார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு பயங்கர போட்டியாக திகழ்ந்தார்.
நடிகர் சங்க தலைவர்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் இருந்தவர். அவர் தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்திற்கு கடனை முழுதாக அடைத்தவர். அதேபோல் அவர் நடிகர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகும்போது கூடுதலாக பணத்தை சேர்த்து வைத்தும் சென்றவர். தற்போது நடிகர் சங்கம் ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருக்கிறதென்றால் அதற்கு முழு காரணம் விஜயகாந்த்தான் என பலர் கூறுவதுண்டு.
நடிகர் சங்கத்துக்காக விஜயகாந்த் செய்தவை: நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிட்டார் விஜயகாந்த். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் ஹாசனில் தொடங்கி அப்போது வளர்ந்துவரும் நடிகர்கள்வரை பலரையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏஜென்சி ஒன்று 70 லட்சம் ரூபாய் (அப்போதைய மதிப்பில் 1 கோடி) ஏமாற்ற பார்த்தது. அதனை தெரிந்துகொண்ட விஜயகாந்த், ஹோட்டலில் வைத்து பணத்தை ஏமாற்ற முயன்ற ஏஜென்சிக்காரரை அடித்து பணத்தை மீண்டும் பெற்றுக்கொடுத்தார். இப்படி நடிகர் சங்கத்துக்காக தன்னால் முடிந்த அளவு அனைத்தையும் செய்திருக்கிறார் விஜயகாந்த்.
தமிழ் பற்று: ஈழம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயரை கேட்டாலே பதறிய தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மட்டும்தான் ஈழ மக்களுக்காக முதலில் உண்ணாவிரதம் இருந்தவர். அதேபோல், தனது மகனுக்கும் பிரபாகரன் என பெயர் சூட்டியவர். அதுமட்டுமின்றி கலைஞர் கருணாநிதிக்கு தங்க பேனா கொடுத்தால் ஜெயலலிதா கோபித்துக்கொள்வார் என சிலர் அட்வைஸ் கூற அதனால் என்ன அவருடைய தமிழுக்கு நான் தங்க பேனா கொடுக்கிறேன் என பெரும் விழா அமைத்து அந்த பேனாவை பரிசளித்தவர். நடிப்பு மட்டுமின்றி இப்படி அரசியல், சமூகம் சார்ந்த விஷயங்களில் முன்னணி நடிகராக இருக்கும்போதே அதிகம் தலையிட்டவர் விஜயகாந்த்.
நட்புக்கு இலக்கணம்: அதேபோல் நட்புக்கு இலக்கணம் என்றால் விஜயகாந்த்தும், இப்ராஹிம் ராவுத்தரும்தான். இருவரும் அவ்வளவு நெருங்கிய நண்பர்கள். இப்ராஹிம் என்ன சொல்கிறாரோ அதைத்தான் விஜயகாந்த் செய்தார், நம்பினார். தாங்கள் கஷ்டப்பட்டது போல் சினிமாவில் யாரும் கஷ்டப்படக்கூடாது என்று பல புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியவர்கள் அவர்கள். அதேபோல் எந்நேரமும் அவர்கள் தங்களது அலுவலகத்தில் பலருக்கும் அன்னமிட்டிருக்கின்றனர். இன்றுவரை தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணம் என்றால் அது விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர்தான்.
கடைசி படம்: அவர் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு சகாப்தம் படத்தில் நடித்தார். இதற்கிடையே அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறிய அவர் சில காரணங்களால் சறுக்கினார். பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனையடுத்து முழு ஓய்வில் இருந்துவந்த விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது..


Click it and Unblock the Notifications











