சொக்கத்தங்கத்தை இழந்து விட்டோம்.. விஜயகாந்த் உயிரிழப்பு.. மனவேதனையில் குஷ்பு இரங்கல்
சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சோகத்தில் மூழ்கி உள்ளது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை குஷ்பு முதல் ஆளாக வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு ரசிகர்களை கலங்கடித்துள்ளது.
விஜயகாந்த் உடன் கருப்பு நிலா, வீரம் விளைஞ்ச மண்ணு, சிம்மாசனம் உள்ளிட்ட சில படங்களில் குஷ்பு இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் சங்க தலைவராக செயல்பட்டு வந்த போது விஜயகாந்தின் நிர்வாகத் திறமை பலரையும் வெகுவாக ஈர்த்தது.

அரசியலில் களம் கண்ட விஜயகாந்த் அதிரடியாக வெற்றிகளை ருசித்து வந்தார். ஆனால், அவரது உடல்நிலையில் குறைவு ஏற்பட்ட நிலையில், அவரை போலவே தேமுதிகவும் சரிவை சந்தித்தது. விஜயகாந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என வெளிநாட்டில் மருத்துவம், மியாட்டில் மருத்துவம் என அவரது குடும்பத்தினர் இரவு பகல் பாராமல் கவனித்துக் கொண்டனர்.
ஆனால், 71 வயதான விஜயகாந்த் உடல்நலக்குறைவு மிகவும் மோசமடைந்த காரணத்தால் மூச்சு விட சிரமப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் ஒரு சொக்கத் தங்கத்தை இழந்து விட்டோம். சினிமாவிலும், கட்சி பணியிலும் அவரது உழைப்பும் ஈடுபாடும் சொல்லில் அடங்காது. அந்த அளவுக்கு உழைத்த நபர் உடல் உபாதைகள் காரணமாக சிரமப்பட்டு வந்த நிலையில், தற்போது நிம்மதியாக ஓய்வெடுக்க நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்கே மிகப்பெரிய இழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











