Vijayakanth: "நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர் வைக்கணும்..” விஜயகாந்துக்கு குரல் கொடுத்த சசிகுமார்
சென்னை: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த போது படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த சசிகுமார், அப்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இந்நிலையில், விஜயகாந்த் நினைவிடம் சென்ற சசிகுமார், முக்கியமான கோரிக்கையும் விடுத்துள்ளார்.
நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர்
கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் காலமானார். தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராகவும் பல மாற்றங்களை செய்து காட்டினார். முக்கியமாக நடிகர் சங்கத்துக்கு இருந்த கடன்கள் அடைக்கப்பட்டது கேப்டன் விஜயகாந்த் தலைவராக இருந்த போது தான்.

சினிமா மட்டும் இல்லாமல் அரசியலிலும் தனி சகாப்தமாக மாஸ் காட்டியிருந்தார் விஜயகாந்த். இந்நிலையில், மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், டிச.28ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் 29ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா, கவுண்டமணி, பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது நடிகர் சசிகுமார் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்ததால் அவரால் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால் படக்குழுவினர் உடன் படப்பிடிப்புத் தளத்திலேயே விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்நிலையில், இன்று மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற இயக்குநர் சசிக்குமார், கேப்டனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் விஜகாந்த் புகைப்படத்தை வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகம் சென்ற சசிகுமார், அங்கு கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய சசிகுமார், "நடிகர் சங்க கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டடத்திற்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை சூர்யாவும் முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுப்ரமணியபுரம் திரைப்படம் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், பின்னர் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மீண்டும் இயக்குநராக முடிவெடுத்துள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை வெப் சீரிஸ்ஸாக எடுக்க பிளான் செய்துள்ளாராம். இதில் சத்யராஜ் லீட் ரோலில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











