காமெடி நடிகர் போண்டா மணி திடீர் மரணம்.. மனம் உடைந்து போன கேப்டன் விஜயகாந்த்.. ட்விட்டரில் இரங்கல்
சென்னை: காமெடி நடிகர் போண்டா மணியின் மறைவு செய்தி அறிந்து ரொம்பவே மனசு உடைஞ்சு போயிட்டேன் என கேப்டன் விஜயகாந்தின் ட்விட்டர் பக்கத்தில் போண்டா மணியின் மறைவுக்கு இரங்கல் பதிவு போடப்பட்டுள்ளது. #BondaMani ஹாஷ்டேக்கை உருவாக்கி சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகர்களுடன் இணைந்து துணை காமெடியனாக நடித்து வந்தவர் போண்டா மணி. இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போன நிலையில், அதனை மாற்ற அறுவை சிகிச்சை செய்ய 9 லட்சம் தேவைப்படுவதாக ஒவ்வொரு நடிகரிடமும் உதவி கேட்டு வந்தார்.

ரஜினி முதல் தனுஷ் வரை செய்த உதவி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் தன்னிடம் போன் போட்டு விசாரித்து முதல் ஆளாக ஒரு லட்சம் ரூபாய் உதவியை அளித்தார் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் போண்டா மணி பெருமையுடன் பேசியிருந்தார். மேலும், நடிகர்கள் தனுஷ், விஜய்சேதுபதி, மயில்சாமி உள்ளிட்டோர் தலா 1 லட்சம் வழங்கி வந்தனர். அவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்த போண்டா மணி சீக்கிரமே அறுவை சிகிச்சை செய்து குணமாகி விடுவேன் என ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்தார். அவரது குடும்பத்தினரும் அவரை நம்பி இருந்த நிலையில், நேற்று இரவு திடீரென மயங்கி கீழே விழுந்த நிலையில், மரணமடைந்தார்.
காமெடி நடிகர்கள் நேரில் அஞ்சலி: முத்து காளையன் உள்ளிட்ட வடிவேலுவுடன் துணை காமெடி நடிகர்களாக நடித்த பல பேர் சென்னையில் உள்ள போண்டா மணியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். காமெடி நடிகர் பெஞ்சமின் வீடியோ வெளியிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
விஜயகாந்த் இரங்கல்: "பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். " என நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு போடப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











