Vijayakanth: மனைவியுடன் விஜயகாந்த் இல்லம் சென்ற சிவகார்த்திகேயன்... கேப்டனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் ட்ரெய்லர் நேற்று இரவு வெளியானது. துபாயில் நடைபெற்ற அயலான் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் இன்று சென்னை திரும்பினார். பின்னர் மனைவி ஆர்த்தியுடன் விஜயகாந்த் இல்லம் சென்ற அவர், கேப்டனின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் 12ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள அயலான், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அயலான் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை துபாயில் நடைபெற்றது.

இதனையடுத்து சென்னை திரும்பிய சிவகார்த்திகேயன், கேப்டன் விஜயகாந்த் இல்லத்துக்கு தனது மனைவி ஆர்த்தியுடன் சென்றார். பின்னர் அங்கிருந்த விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், கேப்டனின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதாவிடம் ஆறுதல் கூறினார். அதேபோல், கேப்டனின் மகன்களை சந்தித்தும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் விஜயகாந்த் இல்லம் சென்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனும் தனது மனைவி ஆர்த்தியுடன் கேப்டனின் இல்லம் தேடிச் சென்று இறுதி மரியாதை செலுத்திய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. முன்னதாக விஜயகாந்தின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்த நேரில் செல்லாமல் இருந்தது விமர்சனத்துக்குள்ளானது. சிவகார்த்திகேயன் தனது மிமிக்ரி நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த், விஜயகாந்த், எஸ்ஜே சூர்யா இவர்களது வாய்ஸில் பேசி தான் பிரபலமானார்.
அதேநேரம் கடந்த ஒருவாரமாக அயலான் பட ப்ரொமோஷன் வேலைகளுக்காக சிவகார்த்திகேயன் சென்னையில் தான் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி இருந்தும் விஜயகாந்த் இறந்த போதே அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த மனமில்லையா என பலரும் விமர்சித்திருந்தனர். இதனையடுத்து தற்போது தனது மனைவியுடன் விஜயகாந்த் இல்லம் சென்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
இன்று சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். அதனால் விஜயகாந்த் மறைவின் போது நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் போன நடிகர்கள், இன்று அவரது நினைவிடத்தில் இறுதி மரியாதை செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











