எனக்கு வைத்தது முஸ்லீம் பெயர்தான்.. ராவுத்தர் மாமா ஒத்துக்கல.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஓபன் டாக்
சென்னை: நடிகர் விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் கொம்புசீவி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார் உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முதல் நாள் முதல் காட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருப்பதால் படக்குழு ஹேப்பியாக இருப்பதாக தெரிகிறது. படத்தின் ரிசல்ட் இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
கேப்டன் விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவர் சண்முக பாண்டியன். தனது தந்தை உயிரோடு இருந்தபோதே கடந்த 2015ஆம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டார். அந்தப் படம் ஓரளவுக்கு வெளிச்சத்தோடு வெளியானாலும் பெரிய ஹிட்டை பெறவில்லை. அதனையடுத்து மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் தோல்வியைத்தான் சந்தித்தன. அதனையடுத்து சினிமா எதிலும் தலைகாட்டாமல் விஜயகாந்த்துடன் பயணப்பட ஆரம்பித்தார் சண்முக பாண்டியன்.
மீண்டும் வந்த மகன்: ஆனால் காலம் அவரை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார். விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து அவரது நீட்சியாக சினிமாவில் இயங்க இளைய மகன் சண்முக பாண்டியனும், அரசியலில் இயங்க மூத்த மகன் விஜய பிரபாகரனும் முடிவெடுத்தார்கள். அந்தவகையில் இந்த வருடம் படைத்தலைவன் படத்தில் நடித்தார். அன்பு என்பவர் இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்த்தை எல்லாம் கொண்டு வந்திருந்தார்கள். ஆனாலும் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை.

பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி: அதேசமயம் ஹீரோவுக்குரிய அத்தனை அம்சங்களும் சண்முக பாண்டியனுக்கு இருப்பதை அப்படம் உணர்த்தியது. இப்போது பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சரத்குமார் முக்கியமான கேரக்டரை ஏற்றிருக்கிறார். நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்தவரின் மகள் தார்ணிகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்ததுபோல் விஜயகாந்த மகனுக்கு பொன்ராம் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்திருக்கிறது.
இன்று ரிலீஸான படம்: யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. முதல் காட்சிக்கு படக்குழு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக இது அவருக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் சண்முக பாண்டியன் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சண்முக பாண்டியன் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் பிறந்து எனக்கு வைத்த பெயர் சண்முக பாண்டியன் இல்லை. எனக்கு முஸ்லீம் பெயர்தான் வைத்தார்கள். அப்பாவுக்கு இஸ்லாமிய நண்பர்கள் நிறைய பேர். அதுவும் இல்லாமல் இப்ராஹிம் ராவுத்தர் மாமா அப்பாவுக்கு உயிர். அவர் மேல் இருந்த அன்பினால் எனக்கு ஷௌஹத் அலி என்றுதான் அப்பா பெயர் வைத்தார். ஆனால் ராவுத்தர் மாமாதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் அப்பா ஒத்துக்கொள்ளவே இல்லை. எனக்கு சாதி, மதம் கிடையாது என்று சொன்னார். முஸ்லீம் பெயர் வைத்தால் எதிர்காலத்தில் பாஸ்போர்ட், ரேஷன் கார்டு பிரச்னை எல்லாம் வரும். ஹிந்து முறையில் வை என்று ராவுத்தர் மாமா சொன்ன பிறகுதான் எனக்கு சண்முக பாண்டியன் என்று பெயர் வைத்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











