விஜயகாந்துக்கு இறுதிச்சடங்கு செய்த விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன்.. கண்ணீருடன் அப்பாவுக்கு அஞ்சலி
சென்னை: மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் திருவுடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு மரியாதை முடிந்தவுடன் விஜயகாந்துக்கு அவர்கள் குடும்ப வழக்கப்படி சாங்கிய சம்பிரதாயங்கள் நடைபெற்று வருகின்றன. இறுதிச்சடங்கில் அப்பாவுக்கு அவருடைய இரு மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இறுதிச் சடங்கு செய்தனர்.
இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் மல்க தந்தையை பறிகொடுத்து விட்டு கதறும் மகன்களாக இருவரும் அழுது கொண்டே வந்ததை போலவே இறுதிச் சடங்கிலும் மாலை அணிந்து கொண்டு திருநீர் பட்டை அடித்துக் கொண்டு இறுதிச்சடங்கை செய்து முடித்தனர். மீடியாக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.

என்னய்யா பெரிய காசு பணம் செத்தா இடுப்புல இருக்க அரைஞாண் கயிறை கூட அறுத்துட்டு தான் புதைப்பாங்கன்னு சொன்ன விஜயகாந்த் தனது சாதனைகளால் முழு அரசு மரியாதையுடன் தற்போது புதைக்கப்பட்டுள்ளார். மதுரை மண்ணின் மைந்தன் விஜயராஜ் தமிழ்நாட்டின் மக்களின் மைந்தன் கேப்டன் விஜயகாந்த் ஆக என்றுமே மனங்களில் நிறைந்து நிற்பார்.
இரு மகன்களை தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் விஜயகாந்தின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை முறையாக செய்து முடித்தனர். சந்தனப் பேழையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் அவர் உருவாக்கிய தேமுதிக அலுவலக சாம்ராஜ்யத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓயாத சூரியனாக சினிமா மற்றும் அரசியலில் உழைத்து வந்த விஜயகாந்த் இனி முழு ஓய்வெடுக்கப் போகிறார். கேப்டன் விஜயகாந்துக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வீர வணக்கம் செலுத்தி ராஜ மரியாதையுடன் விஜயகாந்த் உடலை தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











