Vijayakanth: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. கொரோனா பாதிப்பு.. பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்!
சென்னை: சோதனை மேல் சோதனையாக கேப்டன் விஜயகாந்துக்கு தொடர்ந்து ஒவ்வொரு பாதிப்பாக உடலில் வந்துக் கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் முழுவதும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செய்து விட்டு சமீபத்தில் தான் ஓய்வெடுக்க வீடு திரும்பினார். ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், ஓய்வில் இருந்த மனுஷனுக்கு என்ன இப்படி கொரோனா பாதிப்பு வந்து மீண்டும் குடைச்சல் கொடுக்குதே என ரசிகர்கள் வேதனையுடன் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு: ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த். சமீபத்தில் தான் மியாட் மருத்துவமனையில் இருந்து பூரண குணமாகி வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள கொரோனா பாதிப்புக்கு விஜயகாந்த் ஆளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கெட் வெல் சூன் கேப்டன்: ஒவ்வொரு முறையும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதெல்லாம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பிரார்த்தனை அவரை நல்லவிதமாக குணப்படுத்தி விடும். இந்நிலையில், இந்த முறை கொரோனா பாதிப்புக் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதையெல்லாம் உற்றுநோக்கி வரும் ரசிகர்கள் Get well soon Captain Vijayakanth என பதிவிட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் பிரார்த்தனை: விஜயகாந்த் மீண்டும் குணமாகி வீடு திரும்புவார் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தங்கமான மனிதருக்கு ஏன் இத்தனை பிரச்சனை உடம்பில் ஒன்று மாற்றி ஒன்று வருகிறது என்றும் இறைவா எங்கள் கேப்டனை இந்த நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்று என அவரது ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











