Vijayakanth: சூர்யா, கார்த்தி, சிவகுமார்... குடும்பத்துடன் விஜயகாந்த் வீட்டில் ஆஜர்... நடந்தது என்ன?
சென்னை: புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். திரையுலகில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது கேப்டனின் மறைவு. விஜயகாந்த் உடலுக்கு சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இதனையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்தில் சூர்யா தனியாகவும், கார்த்தி, சிவகுமார் ஒன்றாகவும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
சூர்யா குடும்பத்துடன் விஜயகாந்த் வீட்டில் ஆஜர்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்த விஜயகாந்த், சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தினார். அதன்பின்னர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கிவிட்ட விஜயகாந்த், கடந்த வாரம் 28ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் 29ம் தேதி நடந்தது, பின்னர் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில், சூர்யா, கார்த்தி பங்கேற்காதது சர்ச்சையாகியிருந்தது. சூர்யாவுக்காக பெரியண்ணா படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்திருந்தார் விஜயகாந்த். அந்த நன்றிக் கடன் கூட இல்லாமல் சூர்யா வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடி வருவதாக ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், அவசரமாக காரில் சென்றபடியே விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், கார்த்தியோ காரைக்குடியில் தான் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்படியிருந்தும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த கார்த்தி சென்னை திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் கார்த்தியும் சிவகுமாரும் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நேற்று சூர்யாவும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்தை நினைத்து தேம்பி தேம்பி அழுத சூர்யா, அவருடன் பெரியண்ணா படத்தில் நடித்தது குறித்தும் நெகிழ்ச்சியாக பேசினார்.

மேலும், “அண்ணனைப் போல யாரும் கிடையாது, இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான். எப்போதும் அவரின் நினைவு இருக்கும், நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரும் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளனர்.
கேப்டன் நினைவிடத்தில் கார்த்தி, சிவகுமார் ஒன்றாகவும், சூர்யா தனியாகவும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதனால் மூவருமாக சேர்ந்து விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று, அங்க வைக்கப்பட்டிருந்த கேப்டனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோருக்கு ஆறுதல் கூறினர். விஜயகாந்த் வீட்டுக்கு சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவர்ம் சென்ற போட்டோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











