Vijayakanth: “ராவுத்தர் சொன்னா மறு பேச்சு இல்ல..” லைஃப் டைம் நட்புக்கு மரியாதை கொடுத்த விஜயகாந்த்
சென்னை: கேப்டன் விஜயகாந்த் மதுரையில் இருந்து சென்னை வந்து சினிமாவில் அறிமுகமானவர். சாதாரண ஒருத்தனாக சென்னை வந்த விஜயகாந்த், கேப்டன், புரட்சிக் கலைஞர் என உருவாக அவரது நண்பர் ராவுத்தரும் மிக முக்கியமான காரணம். விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் என்றால் அவர்களது நட்பை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
கேப்டன் விஜயகாந்தின் ரியல் தளபதி
கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற தனித்துவமான ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். மதுரையில் இருந்து சினிமா கனவுகளோடு சென்னை புறப்பட்ட விஜயராஜ்ஜுக்கு உறுதுணையாகவும் முழு பலமாகவும் இருந்தவர் ஒரேயொருவர் தான். அவர்தான் விஜயராஜ் என்ற விஜயகாந்தின் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்.

மதுரையை பூர்வீகமாக கொண்ட இருவருமே சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இதனால் விஜயகாந்தின் சினிமா கனவு நனவாக வேண்டும் என்பதற்காக, அவருடன் சென்னை கிளம்பியவர் இப்ராஹிம் ராவுத்தர். பின்னாளில் விஜயகாந்த்தை டாப் ஹீரோவாக உச்சம் தொட வைத்ததுடன், அவரது நடிப்பில் பல படங்களையும் தயாரித்திருந்தார். ராவுத்தரின் கச்சிதமான வியாபாரக் கணிப்பு, ராவுத்தர் சொன்னால் சரியா இருக்கும் என மறு பேச்சில்லாமல் ஓக்கே சொல்வாராம் விஜயகாந்த்.
விஜயகாந்துக்காக கதை கேட்டு அதற்கு கால்ஷீட் கொடுப்பது, சம்பளம் பேசுவது முதல் அனைத்தையும் ராவுத்தரே கவனித்து வந்தார். விஜயகாந்தின் சினிமா கேரியர் இப்படி தான் இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து வடிவமைத்து கேப்டனை வெற்றி பெற வைத்தார் ராவுத்தர். எப்போதுமே நண்பன் இப்ராஹிம் ராவுத்தரின் பேச்சுக்கு விஜயகாந்த் மறுவார்த்தை பேசியதே கிடையாதாம். அப்படி தனக்கு விருப்பம் இல்லாத போதும், ராவுத்தர் சொன்னதற்காக பல படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த்.
அதில் ஒன்று தான் ஆர்.கே. செல்வமணி இயக்குநராக அறிமுகமான புலன் விசாரணை. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்த், ஆர்கே செல்வமணி இடையில் ஒத்து போகவில்லையாம். அப்போது ராவுத்தர் தான் இருவருக்கும் இடையில் சமரசம் செய்து வைத்து புலன்விசாரணை படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தில் விஜயகாந்த் நடித்தே தீர வேண்டும் என ராவுத்தர் கண்டிஷன் போட்டிருந்தாராம், அதனை விஜயகாந்த் தட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போது விஜயகாந்துக்கு திருமணம் நடக்கவிருந்த அந்நேரத்தில், அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளன. அதனால், விஜயகாந்த் கண்டிப்பாக ஒரு ஹிட் படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்த ராவுத்தர், அதற்கு புலன் விசாரணை சரியாக இருக்கும் என முடிவெடுத்துள்ளார். அதன்பின்னர் அவரே பிரேமலதாவை விஜயகாந்துக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
தன் நண்பனின் அடுத்த இலக்கு அரசியல் என்பதைக் கச்சிதமாகக் கணித்து அதனை வடிவமைத்ததும் இப்ராஹிம் ராவுத்தர் தானாம். அவரை அரசியல் தலைவராக அணு அணுவாக செதுக்கியதில் ராவுத்தருக்கு தான் முக்கியப் பங்கு உள்ளதும் அனைவரும் அறிந்ததே. கேப்டன் என்ற அடைமொழி விஜயகாந்துக்கு வர காரணமாக இருந்த ராவுத்தர், அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாற்றிவிட வேண்டும் என்பதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.
அவருக்காகவே சொந்தமாக 3 தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி ஏராளமான படங்களில் விஜயகாந்தை ஹீரோவாக நடிக்க வைத்தார். அப்படி ஹிட்டான படங்களின் பட்டியலும் பெரியது. பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், என் ஆசை மச்சான், சிம்மாசனம், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சக்கரைத் தேவன், உளவுத்துரை, உழவன் மகன், பரதன், ராஜதுரை, கருப்பு நிலா, தர்மா ஆகிய படங்களை இங்கே குறிப்பிடலாம்.
விஜயகாந்தின் சில அரசியல் முடிவுகள் இப்ராஹிம் ராவுத்தருக்கு பிடிக்காமல் போனதால் தான் இருவருக்கும் இடையே விரிசல்கள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் அவர்கள் நட்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. ஆனாலும் ராவுத்தர் மறைந்த பின்னர் அவரது இல்லம் சென்ற விஜயகாந்த் சிறு குழந்தையைப் போல குலுங்கி குலுங்கி கண்ணீர் மல்க அழுதது பார்ப்பவர்களையும் கண் கலங்கச் செய்தது.


Click it and Unblock the Notifications











