Vijayakanth: விஜய்யை ஏற்றிவிட்ட ஏணி விஜயகாந்த்... கேப்டன் முகத்தில் என்னவொரு சந்தோஷம்ன்னு பாருங்க!
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா மட்டுமின்றி பொது வாழ்விலும் மாமனிதனாக வாழ்ந்து காட்டியவர் கேப்டன். அதேபோல் விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருக்காக பெருந்தன்மையுடன் ஒரு படத்தில் நடித்தும் கொடுத்தார் விஜயகாந்த். அப்போது விஜய்யின் வளர்ச்சியை பார்த்து விஜயகாந்த் மகிழ்ந்த போட்டோ வைரலாகி வருகிறது.
விஜய்யை ஏற்றிவிட்ட ஏணி விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மாபெரும் பேரிழப்பாக அமைந்துள்ளது. மதுரையில் இருந்து எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறியவர் விஜயகாந்த். அதனாலேயே பலருக்கும் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உதவி செய்து மகிழ்ந்தார். அவர்களில் மிக முக்கியமானவர் தற்போதைய கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய்.

இன்றைய தேதியில் தமிழ்த் திரையுலகில் உச்ச நடிகர்களில் விஜய்யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் எண்ணிக்கை, முதல் நாள் ஓபனிங், பாக்ஸ் ஆபிஸ் கிங் என ஆல் ஏரியாக்களிலும் மாஸ் காட்டி வருகிறார் விஜய். ஆனால் ஆரம்பத்தில் பல தோல்வி படங்களில் நடித்தே பின்னர் உச்சம் தொட்டுள்ளார். விஜயகாந்தின் கேரியர் உச்சம் தொட காரணமாக இருந்தது விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தான்.
சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மூலம் விஜயகாந்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.ஏ சந்திரசேகர். இக்கூட்டணியில் வெளியான படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் விஜய் அறிமுகமான புதிதில் அவரை பிரபலப்படுத்த விஜயகாந்திடம் உதவிக் கேட்டுள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர். அப்போது விஜயகாந்த் ரொம்பவே பிஸியாக நடித்து வந்துள்ளார். ஆனாலும் எஸ்.ஏ.சிக்காகவும் விஜய்யின் எதிர்காலத்திற்காகவும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஓக்கே சொன்னாராம் விஜயகாந்த்.
அப்படி உருவானது தான் செந்தூரபாண்டி திரைப்படம். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார் விஜயகாந்த். முக்கியமாக விஜய்யின் கேரக்டருக்கு விஜயகாந்தின் ஒரிஜினல் பெயரான விஜய ராஜ் என வைக்கப்பட்டது. இந்தப் படம் விஜய்க்கு மிகப் பெரிய அறிமுகம் கொடுத்தது. அதன்பின்னர் விஜய்யும் அடுத்தடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், செந்தூரபாண்டி படப்பிடிப்பின் போது விஜய்யுடன் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜயகாந்த் அருகில் விஜய் நிற்க, ரசிகர்களை நோக்கி நாளைய நாயகன் வருகிறான் என்பதாக கேப்டன் விரல் நீட்டி சவால் விடுப்பதாக இந்தப் போட்டோ உள்ளது. அப்போது விஜய்யை விடவும் விஜயகாந்த் முகத்தில் தான் மகிழ்ச்சியும் உற்சாகமும் கரை புரண்டோடுகிறது. விஜயகாந்துக்கு விஜய் இன்னும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத நிலையில் இந்த போட்டோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











