Vijayakanth: விஜய், சூர்யாவை வளர்த்துவிட்ட விஜயகாந்த்.. சொந்த மகன்களை தூக்கிவிட முடியாமல் போனது ஏன்?
சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் உயிரிழந்தார். விஜய், சூர்யா, சிம்பு ஆகியோரை சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்த், அவரது மகன்களை கை தூக்கிவிட முடியாமல் போனது. ஆனால், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தனது மகன்கள் சிவராஜ்குமார், புனித் ரஜ்குமாரை முன்னணி ஹீரோக்களாக மாற்றிக் காட்டினார். விஜயகாந்த் ஏன் தனது மகன்களை கைவிட்டார் என்பது தெரியுமா..?
ஜொலிக்காமல் போன கேப்டனின் வாரிசுகள்
தமிழ் சினிமாவில் தனி சகாப்தமாக வாழ்ந்து காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக் கலைஞர், கறுப்பு எம்ஜிஆர், கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், கடந்த மாதம் 28ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பல்லாயிரக்கணக்கானோர் கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் ரஜினி, கமல் உச்சம் இருந்தபோது விஜயகாந்தும் தனித்து வெற்றி கண்டார். அதேபோல், அரசியலிலும் திமுக, அதிமுக என இரு மாபெரும் சக்திகளுக்கு சரியான போட்டியாக களத்தில் வென்று காட்டினார். அதுமட்டும் இல்லாமல் திரைத்துறையினர், ரசிகன், தொண்டன் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு உதவிக்கு மேல் உதவிகள் பல செய்து வள்ளலாக வாழ்ந்து காட்டியிருந்தார்.
ஆனாலும் தனது மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருவரையும் சினிமா, அரசியல் என இரண்டிலும் கை தூக்கிவிட முடியாமல் போய்விட்டார். முன்னதாக விஜய், சூர்யா ஆகியோரின் ஆரம்ப காலங்களில் அவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்திருந்தார். தற்போது விஜய், சூர்யா இருவருமே கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். அதேபோல் சிம்புவின் முதல் படமான காதல் அழிவதில்லை பூஜை விழாவிலும் விஜயகாந்த் கலந்துகொண்டு வாழ்த்தியிருந்தார்.
இப்படி அடுத்தவர்களின் வாரிசுகளுக்கு காட்ஃபாதராக இருந்த விஜயகாந்த், தனது மகன்களை அப்படியே விட்டுவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர் அப்படி கிடையாது, கேப்டனின் மகன்கள் தான் சினிமாவில் ஆர்வமில்லாமல் ஒதுங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. மூத்த மகன் விஜய பிரபாகரன், அதிக உடல் எடையோடு இருந்ததோடு, அரசியல், சினிமா என இரண்டிலும் விருப்பம் இல்லாமல் இருந்தாராம். செல்லப்பிராணிகளின் பிரியரான இவர், காஸ்ட்லி ரக நாய்களை வளர்ப்பதோடு, அவைகளை வைத்து சர்வதேச அளவில் பரிசுகளை வென்றுள்ளார். மேலும், பேட்மின்டனில் ஆர்வமுடைய அவர் ஒரு அணியை ஏலம் எடுத்தும் நடத்தி வருகிறார்.
இப்போது அவர் உடல் எடையை குறைத்து அரசியல் என்ட்ரி கொடுத்தாலும் போதிய பக்குவமில்லாத பேச்சுகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதனால் தான் விஜய பிரபாகரன் சினிமாவில் வரவில்லையாம். அதேபோல், இரண்டாவது மகன் சண்முக பாண்டியன், சில வருடங்களுக்கு முன்பு 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். புது இயக்குநரின் பெயரை போட்டு விஜயகாந்தே இந்தப் படத்தை இயக்கினாராம். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை.
அதன் பின் முத்தையா இயக்கத்தில் 'மதுரை வீரன்' படத்தில் நடித்திருந்தார். இதுவும் பெரிதாக வெற்றிப் பெறவில்லை என்பதால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படியே யாராவது கதை சொல்ல போனாலும் முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் கோடிகளில் சம்பளம் கேட்பதாகவும், அதனால் யாரும் அவரை வைத்து படம் இயக்க ரெடியாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது,
அதேநேரம் கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டிய ராஜ்குமார், பின்னர் அரசியலில் களமிறங்கி முதலமைச்சராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவரது மகன்களான சிவராஜ்குமாரும் மறைந்த புனித் ராஜ்குமாரும் எளிதாக மக்களிடம் சென்றுவிட்டனர். குழந்தை நட்சத்திரமாகவும் சில படங்களில் நடித்து பிரபலமானதால், அவர்கள் ஹீரோவாக நடிக்கும் போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், அவர்களது கடின உழைப்பும் கதை தேர்வும் தான் இதில் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











