Vijayakanth - எல்லாம் நடிப்பு..நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்கமாட்டார்கள்..அந்தணன் ஓபன் டாக்
சென்னை: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இப்படிப்பட்ட சூழலில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்க வேண்டும் என நினைவேந்தல் கூட்டத்திலும் ஆர்.கே.செல்வமணி, தேவயானி உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து நினைவிடத்துக்கு சென்று பலரும் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். சூழல் இப்படி இருக்க நடிகர் சங்கத்துக்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கும் விஜயகாந்த்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நேற்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

வலுத்த கோரிக்கை: இதில் கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் விஜயகாந்த்தின் மகன்களான விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது விஜயகாந்த் மகனுடன் சேர்ந்து நடிக்க தயார் என்று விஷால் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்க வேண்டும் மேடையிலேயே ஆர்.கே.செல்வமணி, தேவயானி உள்ளிட்ட பலமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
எல்லாம் நடிப்பு: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து கூறுகையில், "விஜயகாந்த் இறந்து இரண்டு வாரங்களுக்கு மேலான நிலையில்தான் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருக்கிறது. அதுவும்கூட பெரியதாக எல்லாம் செய்யவில்லை. ரொம்பவே எளிமையாகத்தான் நடத்தினார்கள். அதிலும் முக்கிய நடிகர்கள் யாருமே இல்லை. கமல் ஹாசன் விக்ரமை தவிர்த்து மாபெரும் ஸ்டார்களும் அங்கு வரவே இல்லை.
அஜித் வரவில்லை: விஜய்கூட இறப்புக்கு வந்தார். ஆனால் அஜித்தோ இந்த நினைவேந்தலுக்கும் வரவில்லை. தனுஷோ ஹைதராபாத்தில் இருக்கிறார். நினைத்திருந்தால் அவர் வந்திருக்கலாம். சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் எல்லாம் இந்த நிகழ்வை தவிர்த்தது சரிதானா?. நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் சாட்டையை சுழற்றியிருக்க வேண்டும். அனைவரும் வர வேண்டும் என அவர்கள் கறார் கண்டிஷனை போட்டிருக்க வேண்டும். எத்தனை கலைஞர்கள் அங்கு இருந்தார்கள்.
அதைகூட செய்ய முடியவில்லை: விஜயகாந்த்துக்கு பொருத்தமான ஒரு ஆந்தம் பாடலைக்கூட அவர்களால் உருவாக்க முடியவில்லை. அது பெரிய அவமானம்தானே. இன்று நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்க வேண்டும் என்றனர். ஆனால் அது நடக்கும் என்றுகூட அவர்கள் சொல்லவிலலியே. யோசித்து முடிவு எடுக்கப்படும் என்றுதானே சொன்னார்கள். அவர்கள் அப்படி எல்லாம் வைத்துவிடமாட்டார்கள்.
வைப்பார்கள் ஆனால்: விஜயகாந்த்தின் பெயரை ஒரு ப்ளாக்குக்கு வேண்டுமானால் வைப்பார்கள். முடிவெடுக்கும்போதே தெரிய வேண்டாமா. அதுமட்டுமில்லாமல் மக்கள் இப்போது விஜயகாந்த் விஷயத்தை பேசிக்கொண்டிருப்பதால் இதனை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த விஷயத்தை மக்களும் மறந்துவிடுவார்கள். நடிகர்களும் மறந்துவிடுவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











