Vijayakanth - விடைபெற்றார் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.. அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது உடல்
சென்னை: நேற்று காலை உயிரிழந்த விஜயகாந்த்துக்கு இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அதனையடுத்து கோயம்பேட்டில் அமைந்திருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புரட்சி கலைஞர், கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இனிக்கும் இளமை படத்தில் அறிமுகமாகி 150 படங்கள்வரை நடித்திருக்கிறார். அதில் பெரும்பாலான படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. மேலும் ரஜினி, கமல் ஹாசன் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் வந்து அவர்களுக்கு கடுமையான போட்டியாளராக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி அவர்களது படங்களை வசூலிலும் ஓவர்டேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்திய அவர் எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் சில விஷயங்களும், அவர் எடுத்த சில முடிவுகளும் அரசியல் தளத்தில் சறுக்கலை ஏற்படுத்தின. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிகிறது.

உடல்நலக் குறைவு: அது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பி தனது வீட்டில் ஓய்வில் இருந்தார். அதனையடுத்து ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பிய அவருக்கு நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உயிரிழப்பு: இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு பிறகு இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு மக்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் விஜயகாந்த்தின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்: தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த்தின் உடல் வாகனத்தில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலமாக தீவுத்திடலில் இருந்து கோயம்பேடுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் சென்ற வழி நெடுகிலும் மக்கள் அலையென திரண்டிருந்தனர். மேலும் அவரது உடலை பார்த்து கதறி அழவும் செய்தனர். அதுமட்டுமின்றி வீர வணக்கம் வீர வணக்கம் கேப்டன் விஜயகாந்த்துக்கு வீர வணக்கம் என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பவும் செய்தனர். ஒருகட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூட பிரேமலதா மைக்கை பிடித்து; இறுதி ஊர்வலத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
உடல் அடக்கம்: மக்கள் மற்றும் அவர்களின் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தபடி விஜயகாந்த் உடலை சுமந்து வந்த வாகனம் ஒருவழியாக கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தை வந்தடைந்தது. அதனையடுத்து அங்கு விஜயகாந்த்துக்கான இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் விஜயகாந்த் குடும்பத்தினர் உட்பட 200 பேர் கலந்துகொண்டனர். இறுதிச்சடங்கு முடிந்த பிறகு விஜயகாந்த்தின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க, காவல் துறையின் இசை வாத்தியங்கள் ஒலிக்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பிறகு அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறுதி சம்பிராதயங்கள் செய்த பிறகு'புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்ற சந்தனப் பேழையில் வைத்து உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. போய் வாருங்கள் கேப்டன்.. மிஸ் யூ


Click it and Unblock the Notifications











