விடைபெற்றார் கேப்டன்.. குண்டுகளின் சத்தத்தை காட்டிலும்.. ஓங்கி ஒலித்த தொண்டர்களின் அழுகுரல்!
சென்னை: 72 குண்டுகள் முழக்கத்துடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விடாமல் ஒலித்த குண்டு சத்தத்தை விட தொண்டர்களின் அழுகுரல் வானை பிளந்தது.
சென்னை நகர் வீதிகளில் நடிகராகவும் அரசியல் தலைவராகவும் எண்ணற்ற பாதைகளை கடந்து வந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் மலர் அஞ்சலியாலும் கண்ணீராலும் நிரப்பப்பட்டு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டு அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் நுழைந்து, முன்னணி நடிகராக வளர்ந்து தமிழக அரசியலில் இணைந்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் தமது வள்ளல் குணத்தாலும் மக்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக விஜய்காந்த் கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். விஜய்காந்த் மறைவு செய்தியைக் கேட்டு தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் தங்களின் இரங்கலைப்பதிவு செய்து வருகின்றனர்.
ரசிகர்கள்,தொண்டர்கள் அஞ்சலி: தேசிய முற்போக்கு திராவிட கழகம் தே.மு.தி.கவின் வளர்ச்சிக்கு அசைக்க முடியாத தூணாக இருந்த அவருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி, இளையராஜா,விஜய் ஆண்டனி, மோகன், லோகேஷ் கனகராஜ், பாண்டியராஜ்,செந்தில் அஞ்சலி செலுத்தினர். அதே போல, அரசியல் கட்சித் தலைவர்கள் சீமான், அன்பு மணி ராமதாஸ், வைகோ,முத்தரசன், கே பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, திருமாவளவன் உள்ளிட்டோர் கட்சி பாகுபாடு இன்றி அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கில் ரசிகர்கள்: தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் 2.30மணிக்கு மேல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழி நெடுகிலும் திரண்டு இருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் காணும் இடம் முழுவதும் மனித தலைகளாகவே இருந்தது. 4.45 மணிக்கு இறுதி சடங்கு நடத்த திட்டமிட்ட நிலையில், இறுதிச்சடங்கு 6 மணிக்கு தொடங்கப்பட்டது. இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் மா சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் மு கஸ்டாலின் இரண்டாவது முறையாக வந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
72 குண்டுகள் முழங்க: சந்தனபேழையில் வெள்ளை வேட்டி சட்டையில் தேமுதிக கொடி போர்த்தப்பட்டு இருந்த விஜயகாந்தின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. விஜயகாந்தியின் இறுதிச்சடங்கை காண கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலத்திற்கு வெளியே எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு இருந்ததால் அதை திரையில் பார்த்த மக்கள், கதறி அழுது கேப்டன் கேப்டன் என்று இதயத்தை பிடித்துக்கொண்டு கதறி அழுதது வானத்தையே துளைத்தது.
இறுதிச்சடங்கு: தந்தையை பறிகொடுத்து விட்டு இருமகன்களும் நேற்று முதல் கதறி அழுது கொண்டே இருந்தனர். தமிழ் முறைப்படி மந்திரங்கள் ஓத இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் இரண்டு மகன்களுக்கும் மாலை அணிவித்து திருநீர் பட்டை அடித்துக் கொண்டு தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை செய்தனர். உழைப்பால் உயர்ந்த ஓய்வறியா சூரியனை பறிகொடுத்துவிட்டு ரசிகர்கள் தொண்டர்கள் பறிதவித்து இருந்த காட்சி கண்களில் நீர்வரவழைத்தது. வாரி வாரி கொடுத்து சிவந்த விஜயகாந்தின் உடல் நம்மைவிட்டு பிரிந்தாலும், அவரின் தொண்டு உள்ள கொண்ட சேவையால் மக்கள் மனதில் என்றும் வாழ்த்து கொண்டு தான் இருப்பார் வாழ்க கேப்டன்.


Click it and Unblock the Notifications











