விஜயகுமார் பேத்தி தியாவுக்கு லண்டனில் நடந்த ரிசப்ஷன்.. 5 மாதமாக நடக்கும் திருமண கொண்டாட்டம்!
சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது லண்டனில் மீண்டும் ஒரு ரிசப்ஷன் நடந்துள்ளது. அதன் போட்டோ மற்றும் வீடியோக்களை அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானாலும், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர், குணச்சித்திர வேடங்களில், சினிமாவில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் விஜயகுமார்: நடிகர் விஜயகுமாருக்கு 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, 1976ம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார். விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியினருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகளும், விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று மகள் உள்ளனர். இதில் ஒரே ஒரு ஆண்வாரிசு என்றால் அது அருண்விஜய் தான். அவர் தற்போது சினிமாவில் டாப் நடிகராக இருக்கிறார்.
பேத்தி திருமணம்: இதில் விஜயகுமார் மகள்களில் ஒருவரான அனிதா மருத்துவராக இருக்கிறார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, கோகுல் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் தியாவும் அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். இதில் தியாவுக்கு தில்லா என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி மாதம் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த, பிரபு,சினேகா,பிரசன்னா, பாக்கியராஜ், மீனா, கேஎஸ் ரவிக்குமார், ஜெயம் ரவி என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினர்.
வனிதாவிற்கு அழைப்பில்லை: சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டாலும், இந்த குடும்பத்தில் ஒருவரான வனிதா கலந்து கொள்ளவில்லை. அவரை விஜயகுமார் குடும்பத்தினர் யாரும் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வனிதா தனது குடும்பத்தோடு சேர்ந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகள் செய்தும், விஜயகுமாரின் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாததால், வனிதா இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

லண்டனில் ரிசப்ஷன்: பந்தக்கால் நடுவது, மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத், ஹல்தி ஃபங்க்ஷன், திருமண வரவேற்பு, நட்சத்திர ஓட்டலில் குடும்பத்திற்கு தடபுடல் விருந்து என சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் தியாவின் திருமண கொண்டாட்ட வீடியோ தான் கண்ணில்பட்டன. திருமணமாகி 5 மாதம் ஆன போதும்,அந்த வைப் குறையாமல் லண்டனில் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கு ரிசப்ஷன் நடைபெற்றது.
லண்டனில் செட்டிலான அனிதா, தனது மகளின் திருமணத்திற்காகத்தான் சென்னை வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் மீண்டும் குடும்பத்தோடு லண்டன் சென்ற நிலையில், அங்கு இருக்கும் நண்பர்களுக்காக மீண்டும் ஒரு ரிசப்ஷனை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியுற்றிருக்கிறார் அனிதா விஜயகுமார்.


Click it and Unblock the Notifications











