தவெகவில்தான் இருக்கிறேன்.. சாகத்தான் போகிறோம்.. விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பரபர பேச்சு
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதொடர்பான வழக்கு இப்போது சிபிஐக்கு மாறியிருக்கிறது. விஜய்யும் விரைவில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவிருக்கிறார். இந்நிலையில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை செய்தார். அந்தவகையில் கடந்த மாதத்தில் கரூருக்கு சென்று தனது தொண்டர்களையும் ரசிகர்களையும் சந்தித்தார். ஆனால் அறிவித்த நேரத்தைவிடவும் ரொம்பவே கால தாமதமாக போன அவரால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்கள். இது பெரும் பரபரப்பை தேசிய அளவில் உண்டு செய்தது.
விஜய்க்கு வலுத்த கண்டனங்கள்: இந்த சம்பவம் விஜய்க்கு எதிராக பலத்த கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் தன் மேல் இருந்த தவறை உணராமல் அவர் பேசிய விதம் கடும் கொந்தளிப்பை பலரிடம் ஏற்படுத்தின. அதேபோல் நேரில் சென்று சந்திக்காமல் இப்படி வீடியோவை வெளியிட்டுக்கொண்டிருக்கிறாரே என்றும் அவரை வைத்து செய்ய ஆரம்பித்தார்கள்.

விரைவில் செல்கிறார்: சூழல் இப்படி இருக்க பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் நேரில் சென்று சந்திக்கிறார் விஜய். சில நாட்களுக்கு முன்பு அவர் வீடியோ காலில் பேசி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களை தத்து எடுத்திருக்கும் அவர்; 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும்; மாதா மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐக்கு விசாரணை: இது ஒருபக்கம் இருக்க இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவும் இட்டிருக்கிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இத்தனை நாட்கள் மௌனம் காத்துவந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று சென்னையில் நடந்த திரைப்பட அகாடெமி பட்டமளிப்பு விழாவில் பேசினார். அப்போது பேசிய அவர், "எனக்கு பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என அனைவரையுமே பிடிக்கும்.
எம்ஜிஆர் அழைத்தார்: ஒருமுறை கருணாநிதியை கைது செய்தார். அப்போது நான் கருணாநிதியின் நீதிக்கு தண்டனை என்று நாளிதழில் விளம்பரம் கொடுத்தேன். எம்ஜிஆர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். உடனே என்னை அவர் அழைத்தார். என்னிடம் சினிமா என்ற ஆயுதம் இருக்கிறது. என்ன நடந்தாலும் பரவாயில்லை. இப்போதெல்லாம் அப்படி படம் எடுக்க முடியாது. எடுத்தோம் என்றால் படம் இல்லை நாமே ரிலீஸே ஆகமாட்டோம்.
என் ரத்தம்: இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் எந்தக் கட்சியிலும் இருந்ததில்லை. இப்போது நான் தவெகவில் இருக்கிறேன் ஒருமுறைதான் பிறக்கிறோம். ஒருமுறைதான் சாகப்போகிறோம். அப்படி வாழ்ந்துவிட்டு போய்டணும். ஏன் தினம் தினம் பயப்பட வேண்டும். என்னுடைய ரத்தம், ஜீன்தானே விஜய்" என்றார். அவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ அதிகம் சோஷியால் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.


Click it and Unblock the Notifications











