தக் லைஃப் விவகாரம்.. விஜய்யின் ’ஜன நாயகன்’, ரஜினிகாந்தின் ’கூலி’ படங்களின் ரிலீஸுக்கு சிக்கல் வருமா?
சென்னை: கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கர்நாடகாவில் அந்த படம் வெளியாகுமா? ஆகாதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் இந்த விவகாரம் சரி ஆகிவிடுமே என்றும் ராஜகோபாலாச்சாரியே மன்னிப்புக் கேட்டாரே என பேசியுள்ளார்.
நீதிபதி வழக்கை விசாரித்து தீர்ப்பு தான் சொல்ல வேண்டுமே தவிர நாட்டாமை செய்யக் கூடாது என சீமான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழில் இருந்து கன்னடம் பிறக்கவில்லை என்பதை ஆராய்ச்சி செய்து தீர்ப்பாக அவரால் சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் எது வந்தாலும் சண்டை செய்ய தயார் என்பது போல தற்போது புகைப்படங்களை கெத்தாக வெளியிட்டுள்ளார். இந்நிலையில், கன்னட தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படத்தின் ரிலீசுக்கும் கன்னட நடிகரான உபேந்திரா 'கூலி' படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படங்களை தடை செய்ய வேண்டும் என சோஷியல் மீடியாவில் தேவையற்ற ரசிகர்கள் சண்டை ஓடிக் கொண்டிருக்கிறது.
கமலுக்கு சப்போர்ட் பண்ணாத பிரபலங்கள்: தமிழ் மொழியின் மீது கொண்ட பற்று காரணமாகவும் பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்முடைய சொந்தம் என்கிற தொனியில் சிவராஜ்குமாருக்கு தான் சித்தப்பா என்றும் கமல்ஹாசன் பேசும் போது தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும் என்றார். அதற்கு எதிராக கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ள நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் உள்ளிட்ட எந்தவொரு முன்னணி நடிகர்களும் குரல் கொடுக்காதது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், சர்ச்சைக்குரிய விஷயத்தில் பலரும் கருத்து தெரிவிக்கிறேன் என பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என்றே முன்னணி நடிகர்கள் நினைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

ஜன நாயகன் படத்துக்கு சிக்கல் வருமா?: தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்துக்கு ஏற்கனவே ஏகப்பட்ட போட்டிகளை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் பேசியதன் காரணமாக தக் லைஃப் படத்துக்கு எழுந்துள்ள பிரச்னைக்கும் ஜன நாயகன் படத்துக்கும் முடிச்சுப்போட்டு கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்து வரும் ஜன நாயகன் படத்தை தமிழில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சிலர் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.

கூலி படத்திலும் கன்னட நடிகர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, செளபின் சாஹீர், உபேந்திரா, அமீர்கான் என பான் இந்தியா நடிகர்கள் மொழி பேதங்கள் எல்லாம் பார்க்காமல் அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நிலையில், கூலி படத்தையும் இங்கே தடை செய்ய வேண்டும் என்றும் அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் நடித்து வரும் நிலையில், அந்த படத்தையும் தடை செய்ய வேண்டும் என சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் சிலர் ரசிகர்கள் சண்டையை கிளப்பி வருகின்றனர். ஒரு திரைப்படம் பலரது உழைப்பில் உருவாகிறது. தனிப்பட்ட ஒரு நபரின் சொல்லோ, செயலோ ஒரு படத்தை முடக்குவது என்பது சரியான விஷயம் அல்ல, அதற்கு ஆதரவாக போராடுவதும் தவறான விஷயம் என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தக் லைஃப் படத்தை பார்க்கவும் கர்நாடகாவில் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், விரைவில் சுமூக முடிவு எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











