’ஜ’ன நாயகன் எதுக்கு?.. அந்த கட்சி வாடை வருதே.. இந்த படத்துக்கு தமிழ் தலைப்பை ‘அ’ வினோத் வைக்கலையே?
சென்னை: தளபதி விஜய்யின் 69வது படத்திற்கு 'ஜன நாயகன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சோஷியல் மீடியாவில் அதுதொடர்பாக ஏகப்பட்ட ட்ரோல்களும் சினிமா பிரபலங்கள் பலர் யூடியூப் வீடியோக்களில் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்களை கிளப்பி வருகின்றனர்.
அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருது குறித்தும் விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்தும் பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் பல்வேறு கருத்துக்களும் விவாதங்களும் கிளம்பி வருகின்றன.

விஜய் கையில் வைத்திருந்த சாட்டை எம்ஜிஆரின் சாட்டை என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் சாட்டை என்று ட்ரோல்களும் பறந்த நிலையில், தற்போது 'ஜன' என்கிற வார்த்தைக்கு எதிரான விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.
பாரதிய 'ஜன'தா கட்சி: அவங்க பாசிசம்னா, நீங்க என்ன பாயாசாமான்னு விஜய் தனது முதல் மாநாட்டிலேயே பேசியது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. திமுகவை தொடர்ந்து எதிர்த்து வரும் விஜய் பாஜகவின் 'பி' டீம் என்கிற விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் இடம்பெற்ற ஜனம் என்கிற வார்த்தையை குறிக்கும் வகையில் ஜன நாயகன் என விஜய் தனது படத்துக்கு தலைப்பு வைத்தது ஏன் என்கிற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
தமிழ் தலைப்பு இல்லை: இயக்குநர் எச். வினோத் தன்னை அ. வினோத் என்றே அழையுங்கள் எனக் கூறியுள்ளார். மேலும், அவர் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களின் தலைப்பு தமிழில் இருந்தது என்றும் விஜய் கடந்த சில ஆண்டுகளாக பீஸ்ட், லியோ, கோட் என ஆங்கில தலைப்புகளில் நடித்து வரும் நிலையில், இந்த முறை ஜன நாயகன் என சமஸ்கிருத தலைப்பை வைத்திருப்பது ஏன் என்றும் இதுவும் தமிழ் தலைப்பு இல்லை என்கிற சர்ச்சைகளையும் சோஷியல் மீடியாவில் கிளப்பி உள்ளனர்.

மக்கள் நாயகன்: இதற்கு ராமராஜனின் பட்டமான மக்கள் நாயகன் என அழகான தமிழிலேயே படத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாமே என்கிற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. லியோ மற்றும் கோட் படத்தின் டைட்டில் வரை பான் இந்தியாவை மையப்படுத்தி வைத்து வந்த விஜய் இந்த முறை 'ஜன நாயகன்' என வைத்துள்ள நிலையில், இந்த படமும் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை நடத்துவது கஷ்டம் தான் என்றும் மேலும், சிலர் வசூல் குறித்த விவாதங்களையும் எழுப்பியுள்ளனர். எப்படி இருந்தாலும் படம் வெளியாகும் போது தளபதி ரசிகர்களின் பவர் என்னான்னு மற்ற நடிகர்களின் ரசிகர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்றும் இண்டஸ்ட்ரி ஹிட் அடிப்பது உறுதி என விஜய் ரசிகர்கள் தளபதியின் கடைசி படத்தை கொண்டாடும் முடிவுடன் அடுத்து ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ சார் விடுவீங்க என கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்தை பிரபா ஒயின்ஷாப்பாக மாற்றி அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர். விஜய் ரசிகர்களுக்கு மாத மாதம் ஒரு அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











