டேமேஜான விஜய்.. வடிவேலு நிலைமைதான் திரைத்துறையில் அவருக்கும் வருமா?.. வருங்காலத்தில் அப்படி நடக்குமா?
சென்னை: விஜய்தான் கடந்த சில நாட்களாக தேசிய அளவில் தலைப்பு செய்தியாக இருக்கிறார். கரூரில் அவர் அரசியல் சுற்றுப்பயணம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். அதுதொடர்பாக விஜய்யை பலரும் கண்டிக்கும் நிலைமையில்; அவர் வெளியிட்ட வீடியோ அவர் மீதான இமேஜை டேமேஜ் ஆக்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து அரசியலே செய்யவில்லை; மக்களை சந்திக்கவில்லை என திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தன. இதனால் அவர், 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை அறிவித்து; வாராவாரம் பல மாவட்டங்களுக்கு சென்று தொண்டர்களையும் மக்களையும் சந்திக்கிறார்.
தாமதித்த விஜய்: அந்தவகையில் கடந்த வாரம் கரூருக்கு சென்றார். நாமக்கல்லில் காலை 9 மணிக்கும், கரூரில் மாலை 5 மணிக்கும் அவர் பேச வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் நீலாங்கரையிலிருந்தே அவர் காலை 8.45 மணிக்குத்தான் கிளம்பினார். இதனால் குறிப்பிட்ட ஊர்களுக்கு வந்து சேர நீண்ட நேரம் ஆகிவிட்டது. இது எதுவும் தெரியாத தொண்டர்களும், மக்களும் விஜய்யை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வத்தில் காலை முதலே கூட ஆரம்பித்துவிட்டார்கள்.
கரூரில் அசம்பாவிதம்: நிலைமை இப்படி இருக்க கரூருக்கு மாலை 7 மணியளவில் வந்து பேச ஆரம்பித்தார் விஜய். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் மூச்சு திணறினார்கள். கடைசியில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்கள். இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் விஜய்யை வைத்து செய்துவருகிறார்கள். அதுவும் சம்பவம் தெரிந்த பிறகும் கரூரை விட்டு அவர் வெளியேறியது பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

வீடியோ போட்ட விஜய்: சென்னைக்கு சென்றவர்; உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் போட்டார். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை இரண்டு நாட்கள் சைலென்ட் மோடுக்கு போய்விட்டார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மறுபக்கமோ தமிழ்நாடு அரசு ஆணையம் அமைத்தது. மேலும், பாஜக எம்பிக்கள் குழு கரூருக்கு விரைந்து நிலைமையை ஆராய்ந்தது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் அந்த வீடியோவை வெளியிட்டார் தளபதி.
மடைமாற்றிய விஜய்: இந்த சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வீடியோ வந்திருக்கிறது என்று தெரிந்ததும்; கண்டிப்பாக வருத்தம் தெரிவிப்பார்; தன் மீது இருக்கும் தவறுகளை உணர்ந்து அதை திருத்திக்கொள்வார் என்பதுதான் அனைவரின் எண்ணமும். ஆனால் அந்த வீடியோவில் அவர் பேசியது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை; ஒட்டுமொத்தமாக தன் மீது தவறே இல்லை; தமிழ்நாடு அரசுதான் காரணம் என மடைமாற்றும் தொனியில் பேசுகிறார் என்று கண்டனங்கள் வலுத்தன.
டேமேஜான விஜய்: முக்கியமாக இந்த வீடியோ விஜய்யின் இமேஜை மொத்தமாக டேமேஜ் செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்வதற்கு விருப்பமில்லை, எந்த கட்சி தலைவரும் தன் கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்பமாட்டார்' என கனிவோடும், நாகரீகமாகவும் நடந்துகொண்ட முதலமைச்சரையே பக்குவமில்லாமல் பேசியிருக்கிறார் விஜய். அரசியல் செய்ய தெரியவில்லை என்றால்; அரசியல் செய்ய தெரிந்த நான்கு பேரை உடன் வைத்திருக்க வேண்டும்; இது எதுவுமே அவர் செய்யவில்லையே என அவரது கட்சி தொண்டர்களே முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
திரைத்துறையிலும் குறையும் ஆதரவு?: அதேபோல் தனக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என திரைத்துறையில் சிலர் விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாட்டை கட்சி ஆரம்பித்தபோது எடுத்தார்கள். ஆனால் கரூர் விவகாரம் அவர்கள் மத்தியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே தெரிய வேண்டும். பெரிய இயக்குநர்கள், ஹீரோக்கள் யாரும் வெளிப்படையாக விஜய்யை கண்டிக்காவிட்டாலும்; அவர்கள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சம் ஒதுங்கத்தான் செய்திருக்கிறார்கள்.

விஜய் என்ன செய்ய வேண்டும்?: இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் கட்சி தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்; இல்லையென்றால் அவர்களை ஒழுங்குப்படுத்தும் பொறுப்பை தலைவர் ஏற்க வேண்டும். தவெகவில் இரண்டுமே இல்லை. கரூர் துயரம் குறித்து நடிகை ஓவியா போட்ட இன்ஸ்டா போஸ்ட்டில் அவரை தரக்குறைவாக பேசினார்கள் தொண்டர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் நீதிபதியையே ஒருமையில் பேசிவருகிறார்கள். இதையெல்லாம் விஜய் கவனித்தாரா இல்லை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. தொண்டர்களோ, ரசிகர்களோ இப்படி மோசமாக ரியாக்ட் செய்துகொண்டிருக்கும்போது விஜய் அவர்களை கண்டிக்காமல், கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ளுங்கள் என்று ஒரு அறிக்கைகூட வெளியிடாமல் எந்த ரியாக்ட்டும் செய்யாமல் இருப்பது கண்டிப்பாக அவருக்கு ஆபத்தான ஒன்றாகத்தான் முடியும் என்பது அவரது நலம் விரும்பிகளின் எண்ணம்.
வடிவேலுவின் நிலைமைதான் விஜய்க்குமா?: ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் அவர் அந்த முடிவை இறுதியாக எடுப்பார். இப்போதைக்கு இருக்கும் நிலைமைப்படி பார்த்தால் கரூரில் நடந்த அசம்பாவிதமும், அதற்கு பிறகு விஜய் நடந்துகொண்ட விதமும் கண்டிப்பாக பெரிய பின்னடைவை அவருக்கு கொடுத்திருக்கிறது. முக்கியமாக அவரை தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே இதுவரை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்.
இப்போது அவர் செயல்பாடை பார்த்து கண்டிப்பாக மக்கள் இதுவரை அவர் மீது வைத்திருந்த பார்வை மாறுபட வாய்ப்புகள் அதிகம். இந்த பார்வை இப்படியே நீடித்தால் அரசியலிலிருந்து அவர் மீண்டும் சினிமாவுக்கு வந்தாலும் இதன் மோசமான எதிரொலி திரைத்துறையிலும் விஜய்க்கு வரும். சுருக்கமாக சொன்னால் அரசியல் மேடை ஏறி அநாகரிகமாக பேசி எப்படி இடையில் சில வருடங்கள் வடிவேலு காணாமல் போனாரோ அதே நிலைமை விஜய்க்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்பது திரைத்துறை வல்லுநர்களின் கருத்து. புரிந்துகொள்வாரா விஜய்?..


Click it and Unblock the Notifications











