Jason Sanjay: தாத்தா வழியில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. நடிப்பை தேர்ந்தெடுக்காதது ஏன்?
சென்னை: நடிகர் விஜய் ஒரு இயக்குநரின் மகனாகத்தான் நடிக்கத் துவங்கினார். அதிகமான விமர்சனங்களையும் எதிர்கொண்டு முன்னேறினார்.
ஆனால் துவக்கத்தில் தன்னுடைய அப்பாவின் தோள்களில் தான் விஜய் சவாரி செய்து தன்னை வெளிப்படுத்தினார். இதையடுத்து மற்ற இயக்குநர்களுடன் அவர் கூட்டணி அமைத்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகவுள்ளது குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தாத்தா எஸ்ஏசி வழியில் இயக்கத்தை தேர்ந்தெடுத்த சஞ்சய்: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்தப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் விஜய். தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகளில் கடந்த சில மாதங்களாக வெங்கட் பிரபு கோவாவில் ஈடுபட்டிருந்தார்.
லியோ படத்தின் ரிலீசையடுத்து தளபதி 68 படத்தில் விஜய் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நீண்டநாள் விருப்பமான அரசியல் பிரவேசம் குறித்தும் விஜய் முக்கியமான முடிவெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார். இதுகுறித்து லைகா நிறுவனம் இன்று பிற்பகலில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. சஞ்சய்யும் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
முற்றிலும் புதுமுகங்கள் இணையவுள்ள இந்தப் பிராஜெக்ட்டில் அனுபவமிக்க தொழில்நுட்ப கலைஞர்களை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக லைகா அறிவித்துள்ளது. லண்டனில் இதுகுறித்த படிப்புகளை சஞ்சய் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 முதல் 2020 வரை டொரோண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்பட தயாரிப்பிற்கான டிப்ளமோவை முடித்துள்ளார்.
லண்டனில் கடந்த 2020 முதல் 2022 வரையில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) படிப்பையும் அவர் நிறைவு செய்துள்ளார். முன்னதாக ஒரு பேட்டியில் தன்னுடைய மகனுக்கு நடிப்பதை விட இயக்கத்தில்தான் அதிக ஆர்வம் என தன்னுடைய மகனின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய். இந்நிலையில் சஞ்சய் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கேற்ப முன்னதாக தன்னுடைய தந்தையுடனும் பாடல் ஒன்றில் நடித்திருந்தார் சஞ்சய்.

ஹீரோவுக்கான லுக்கும் அவருக்கு சிறப்பாக உள்ளதாக கமெண்ட்ஸ் வெளியான நிலையில், தற்போது அவர் இயக்குநர் துறையை கையில் எடுத்துள்ளார். ஒரு மாஸ் ஹீரோவின் மகன் இயக்குநர் துறையை தேர்ந்தெடுத்திருப்பது இதுதான் முதல் முறை. நடிப்பை காட்டிலும் இயக்குநராக சிறப்பாக தன்னை வெளிப்படுத்த தனிப்பட்ட திறமையை சஞ்சய் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ள நிலையில், அவர் தன்னுடைய படங்களை சிறப்பாக கொடுப்பார் என்று நம்பலாம்.
ஜேசன் சஞ்சயின் தாத்தாவும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசி, இயக்குநராக பல சிறப்பான படங்களை கொடுத்துள்ளார். கடந்த 1981ம் ஆண்டில் சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து சமூக பின்னணியிலான பல படங்களை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் காட்டியவர். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில்தான் விஜய் ஆரம்ப காலக்கட்டங்களில் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய தந்தையின் வழியை தேர்ந்தெடுக்காமல் தாத்தாவின் வழியில் சஞ்சய் இயக்குநராகவுள்ளார்.


Click it and Unblock the Notifications











