அரசியல் இயக்க தலைவராக பயமாக இருக்கிறது.. நல்ல தலைவர்கள் வேண்டும்.. விஜய் கொடுத்த மாஸ் ஸ்பீச்
சென்ன: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி களமாடுகிறது. சூழல் இப்படி இருக்க 10 மற்றும் 12ஆவது வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி தவெக சார்பில் இன்று நடைபெற்றது. அதில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
கோலிவுட்டின் கிங்காக வலம் வந்துகொண்டிருக்கிறார் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும்; வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. அந்த இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன. இப்போது அவர் GOAT படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்ட ஆரூடத்தை உண்மையாக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய அக்கட்சி; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. அதற்கான அத்தனை முன்னெடுப்புகளையும் விஜய்யும், அவரது கட்சியும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
விஜய் நடத்தும் விழா: அந்த முன்னெடுப்புகளில் ஒன்றாக 10 மற்றும் 12ஆவது வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவ, மாணவிகளை தமிழ்நாடு முழுவதுமிலிருந்து அழைத்து வந்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியை விஜய் நடத்திவருகிறார். கடந்த வருடமும் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் இந்த வருடமும் அந்த நிகழ்ச்சி திருவான்மியூரில் நடத்தப்பட்டது. ஆனால் போன வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தன. அதாவது போன வருடம் மாணவ, மாணவிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. இந்த வருடமோ பணத்துக்கு பதிலாக வைர மோதிரம் கொடுக்கப்பட்டது. மேலும் பெற்றோர்களில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது.
விஜய் பேச்சு: நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் பேசுகையில், " நமக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் அதில் வெற்றி கிடைக்கும். நமக்கு தேவை நல்ல தலைவர்கள். இப்போதைய மீடியாக்களில் நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காண்பிக்கிறார்கள். அதை நாம் அப்படியே நம்பிவிடக்கூடாது. படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஒருசில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரசாரத்தை நம்பாமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்கள் வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியம்.
அச்சமாக இருக்கிறது: உங்கள் நண்பர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்துங்கள். உங்களது அடையாளத்தை எந்த காரணத்துக்காகவும் விடாதீர்கள். சமீப காலமாக தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோராக, அரசியல் இயக்க தலைவராக எனக்கு அச்சமாக இருக்கிறது. அரசாங்கத்தைவிடவும் நமது வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று பேசிய அவர்,
Say No To Temporary Pleasures, Say No To Drugs என்று தான் கூறி; மாணவ, மாணவிகளையும் கூற செய்தார். அதற்கு பிறகு பேசிய விஜய், இந்த உறுதிமொழியை நீங்கள் எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு மேல் அட்வைஸ் செய்து போர் அடிக்க நான் விரும்பவில்லை. பொதுவாக அறிவுரை சொன்னால் பிடிக்காது. நானும் அப்படித்தான்" என்று கூறி பேச்சை முடித்தார்.


Click it and Unblock the Notifications











