விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தளபதி 69 படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போ தெரியுமா?
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதற்கும் முன்னதாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்களும் அந்த மாதிரியான விமர்சனங்களையே பெற்றன. இப்படி தொடர்ந்து நான்கு படங்களும் விஜய்க்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் அவர் தொடங்கியிருக்கிறார். நேற்றுகூட விசிகவின் ஆதவ் அர்ஜுனா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் விஜய்.
கோலிவுட்டின் வசூல் மன்னர் என்று அழைக்கப்படும் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. சாதாரண கதை, திரைக்கதையை வைத்துக்கொண்டு வெங்கட் பிரபு படத்தை ஒப்பேற்றிவிட்டார் என்று ரசிகர்கள் பேசினார்கள். அதேசமயம் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டிவிட்டதாகவும்; அவரை அப்படி பார்ப்பது ரொம்பவே புதுமையாக இருந்ததாகவும் கூறினார்கள்.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சியின் முதல் மாநாடு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. விக்கிரவாண்டியில் நடந்த அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சில் அனல் பறந்தது. ஆனாலும் ஆளுங்கட்சியான திமுகவை தேவையில்லாமல் பகைத்துக்கொள்கிறாரோ என்று அவரது தொண்டர்கள் பேசிக்கொள்வதையும் கேட்க முடிகிறது. முழுக்க முழுக்க அரசியலில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் விஜய்.
கடைசி படம்: அதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்குவதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். அதனால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கிறார். அந்தப் படத்தை இயக்குநர் அ.வினோத் இயக்குகிறார். படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு ஷூட்டிங்கும் தொடங்கியது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோலும், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் மமிதா பைஜு நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியிருக்கிறது.
அப்செட்டில் ரசிகர்கள்: இருந்தாலும் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவது தங்களது வருத்தத்தை கொடுப்பதாக ரசிகர்கள் ஒருபக்கம் அப்செட்டும் ஆகியிருக்கின்றனர். ஆனால் அவர் முழுதாக ஒதுங்கிவிடமாட்டார் கண்டிப்பாக படங்களில் மீண்டும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு என்ற பேச்சுக்களையும் திரைத்துறையில் கேட்க முடிகிறது. சூழல் இப்படி இருக்க தளபதி 69 எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று கேள்விகள் எழுந்த நிலையில்; இந்தப் படம் தெலுங்கில் ரீமேக்கான பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதெல்லாம் சுத்த பொய் என்று தற்போது தெரியவந்திருக்கிறது.
எப்போது டைட்டில்?: இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும்; எப்போது ரிலீஸாகும் என்ற ஆர்வமும் அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் டைட்டில் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு இந்தப் படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், அப்போ புத்தாண்டை விஜய் பட டைட்டிலோடு வரவேற்கலாம் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











