ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தளபதி கச்சேரியா பகவந்த் கேசரியா?.. இதெல்லாம் நோட் செஞ்சிங்களா?
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நேற்று படத்தின் முதல் சிங்கிளான தளபதி கச்சேரி பாடல் வெளியானது. அதனை விஜய்யும், அனிருத்தும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். பாடல் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை கொண்டாடும்வகையில் இருந்தாலும்; மறுபக்கம் பாடலின் சில விஷயங்கள் பகவந்த் கேசரியை ஒத்துப்போவதை அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் 2026அம் ஆண்டு தேர்தல் முடிவுகளை பொறுத்தே அவர் தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்பது தெரியவரும். எப்படி இருந்தாலும் ஜனநாயகனை ரசிகர்கள் கொண்டாடும் மூடில்தான் இருக்கிறார்கள். ஏனெனில் அரசியல் பிரவேசம் செய்திருக்கும் சூழலில் இப்படம் உருவாகி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள்: 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகிறது. சூழல் இப்படி இருக்க நேற்று படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியானது. தளபதி கச்சேரி என்ற அந்தப் பாடலை விஜய்யும், அனிருத்தும் பாட தெருக்குரல் அறிவு எழுதியிருக்கிறார். சேகர் மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோரும் விஜய்யுடன் நடனமாடியிருக்கிறார்கள்.

எப்படி இருக்கு பாடல்?: விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு பிறகு இந்தப் பாடல் வந்ததால் இதன் வரிகள் எப்படி இருக்கும் என்ற ஆவல் அனைவரிடமுமே இருந்தது. எதிர்பார்த்தபடியே பாடல் வரிகள் முழுவதும் அவரது அரசியல் வருகையை கொண்டாடும் விதமாகவும், தனக்கு பின்னால் வாருங்கள் என அனைவரையும் விஜய் அழைப்பது போன்றும் எழுதியிருந்தார் தெருக்குரல் அறிவு. இதெல்லாம் அவரது ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜியை கொடுத்திருக்கிறது.
நடனம் சூப்பர்: பாடலின் மற்றொரு ஹைலைட்டாக விஜய்யின் நடனம் இருக்கிறது. எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பை அசால்ட்டாக போட்டதை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் ஃபீல் செய்யவே ஆரம்பித்திருக்கிறார்கள். இனிமேல் விஜய் அண்ணாவின் நடனத்தை திரையில் பார்க்கவே முடியாதா என ஏங்கியிருக்கின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இப்படம் பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என்று படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சொல்லப்பட்டுக்கொண்டே இருந்தது.
பாடலில் டீகோட்: ஆனால் அதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனால் தளபதி கச்சேரி பாடலை பார்க்கும்போது ஒருவேளை இது பகவந்த் கேசரி ரீமேக்காக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. அந்தப் படத்தில் பாலைய்யாவுடன் சேர்ந்து காஜல் அகர்வாலும், ஸ்ரீலீலாவும் ஒரு பாடலுக்கு ஆடியது போல் இதிலும் பூஜா ஹெக்டேவும், மமிதா பைஜுவும் ஆடியிருக்கிறார்கள். அதேபோல் பகவந்த் கேசரி பாடலில் ஸ்ரீலீலா எப்படி கழுத்தி ஒரு கருப்பு கயிறு கட்டியிருந்தாரோ அதே மாதிரியான கயிறு இங்கு மமிதாவின் கழுத்திலும் இருக்கிறது.
மேலும் அப்பாடலில் பாலைய்யாவுடன் ஏகப்பட்ட நடன கலைஞர்கள் ஆடியிருந்தார்கள். அதேதான் இப்பாடலிலும் நடந்திருக்கிறது. இவை அனைத்தையும் வைத்துதான் இது தளபதி கச்சேரியா இல்லை பகவந்த் கேசரியா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. மேற்கூறிய அனைத்தையும் பலரும் டீகோட் செய்து சோஷியல் மீடியாவிலும் அதிகம் பகிர்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











