உயிருடன் வந்த விஜய்யின் தங்கை.. கலங்கிப்போன ஷோபா சந்திரசேகர்.. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு
சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் விஜய். இப்படி அடுத்தடுத்த பிஸி ஷெட்யூலில் இருக்கும் விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார். அவர் பெயர் வித்யா. இப்போது அவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமான இயக்குநராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். விஜய் இப்போது இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அவரது தந்தை வித்யா குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. சிறிய வயதிலேயே வித்யா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கை மீது பாசம்: விஜய்க்கு வித்யா மீது எப்போதுமே தனித்த பாசம் உண்டு. அதன் காரணமாக வித்யா உயிரிழந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கல கலவென்று இருந்த விஜய் வித்யா உயிரிழப்புக்கு பிறகு ரொம்பவே அமைதியாகிவிட்டார் என்று பலரும் கூறுவதுண்டு. வித்யா மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தாலும் அதுகுறித்து பொது வெளிகளில் விஜய் வாய் திறந்து பேசியதில்லை.
மீள்வது கடினம்: வித்யா தன்னுடைய மூன்றரை வயதில் உயிரிழந்தார். வித்யா குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த விஜய், , “எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அது என் தங்கை வித்யாவின் உயிரிழப்புதான். அதிலிருந்து மீள்வது கடினம். ஆனால் ஒன்று எனது தங்கையை நாங்கள் புதைக்கவில்லை. விதைத்திருக்கிறோம். அதனால்தான் எனக்கு இவ்வளவு தங்கைகள் இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
அன்னையர் தினம்: விஜய்க்கு மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்குமே வித்யாவின் இழப்பு பெரும் இடியாக இருந்தது. இந்தச் சூழலில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனியார் ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர். அப்போது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாகவும், கலங்க வைக்கும் விதமாகவும் ஒரு விஷயத்தை ஏற்பாடு செய்திருந்தது அந்த ஊடகம்.
மீண்டும் விஜய்யின் தங்கை: அதாவது இப்போது ஏஐ தொழில்நுட்பம் பீக்கில் இருக்கிறது. அதனை வைத்து இறந்துபோனவர்களை விஷுவலாக மீண்டும் உயிருடன் கொண்டு வர முடிகிறது. அந்தவகையில் விஜய்யின் தங்கை வித்யாவையும் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து உயிருடன் உருவாக்கி ஷோபாவிடம் காண்பித்தார்கள். தனது மகளை பார்த்த ஷோபா கலங்கியபடி நானே வித்யாவை அணைக்கிறேன் என்று கூறினார். அதனைப் பார்த்த பலரும் கலங்கித்தான் போனார்கள்.
பெரிய இழப்பு: அதற்கு பிறகு அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வித்யா இருந்திருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். எந்த பெண் குழந்தையை பார்த்தாலும் எங்களுக்கு வித்யாவின் நியாபகம்தான் வரும். மே 20ஆம் தேதிதான் அவர் இறந்தார். அன்றைய தினம் விஜய்க்கு மெசேஜ் அனுப்பினால்கூட, 'எப்படி அம்மா மறக்க முடியும் வித்யா இறந்த நாளை’ என்று கூறுவார். வித்யா மூன்றரை வயதிலேயே நன்றாகவே பாடுவார். எங்களுக்கு பெண் குழந்தைகள் என்றால் ரொம்பவே இஷ்டம்” என்றார்.


Click it and Unblock the Notifications











