4 முன்னணி இயக்குனர்கள் இயக்கும்.. "குட்டி ஸ்டோரி" ஆந்தாலஜி திரைப்படம்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
நான்கு முன்னணி இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்திற்கு குட்டி ஸ்டோரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி காதலர் தினத்துக்கு வெளியாக உள்ளது.

சில்லுக்கருப்பட்டி
தமிழ் சினிமாவில் இப்போது ட்ரெண்டிங்காக உருவாகிவரும் ஆந்தாலஜி திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து தனித்தனி சுவாரசியமான கதைகளை இயக்கி வெளியாகி வரும் ஆந்தாலஜி திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் 2019ஆம் ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று விருதுகளை குவித்து வருகிறது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில்
சில்லுக் கருப்பட்டியை தொடர்ந்து பாவக் கதைகள் சமீபத்தில் வெளியாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்த நிலையில் மணி ரத்னம் தயாரிப்பில் நவரசா ஆந்தாலஜி படம் ஒன்றும் உருவாகி வருகிறது. இதில் 9 முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வரும் நவரசா நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நான்கு முன்னணி இயக்குனர்கள்
இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் இப்பொழுது குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படமும் இணைந்துள்ளது. நான்கு முன்னணி இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி, விஜய் ஆகியோரின் கூட்டு முயற்சியில் நான்கு வித்தியாசமான கதைகளில் உருவாகி வருகிறது.

கௌதம் மேனன் அமலாபால்
நான்கு கதைகளும் காதலை மையமாகக் கொண்டு இருக்க முதல் கதையில் கௌதம் மேனன் அமலாபால் நடிக்கின்றனர், இதை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குவார் என தெரிகிறது. இரண்டாம் கதையில் வருண் சாக்ஷி அகர்வால் நடிக்க இதனை விஜய் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி ஹீரோவாக
வெங்கட் பிரபு இயக்கும் கதையில் அமிதாஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். அமிதாஷ் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் கதையில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஜோடியாக அருவி புகழ் அதிதி பாலன் நடிக்கிறார்.

பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸ்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகவும் வித்தியாசமாக பார்க்கவும் அழகாக இருக்க முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என களம் இறங்கியிருக்கும் இந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











