ரெண்டு ஃபோர்க்கை வைத்துக் கொண்டு அப்படியொரு கொலவெறி ஃபைட்.. ஏஜென்ட் டீனாவின் மிரட்டல் பேட்டி!
சென்னை: விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் மற்றும் கிளைமேக்ஸில் வரும் சூர்யா என ஒவ்வொரு நடிகரும் நடிப்பில் வெறித்தனம் காட்டியிருப்பார்கள்.
ஆனால், அவர்களையும் விஞ்சும் அளவுக்கு ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்த அந்த நடிகை மிரட்டி எடுத்திருப்பார்.
விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆகும் காட்சிக்கு இணையாக விக்ரம் படத்தில் டீனாவுக்கு சண்டைக் காட்சி வைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், ஏஜென்ட் டீனாவாக நடித்த டான்சர் வசந்தி அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

ஏஜென்ட் டீனா
(ஸ்பாய்லர் அலர்ட்) விக்ரம் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே கமல் கொல்லப்படும் காட்சிக்கு பிறகு பகத் ஃபாசில் வீட்டுக்கு வந்து நடிகை ஸ்வாதிஷ்டாவிடம் விசாரணை நடத்துவார். அப்போது கீழே விழும் பொருளை அசால்ட்டாக அந்த வீட்டின் வேலைக்காரி பிடிப்பார். அங்கேயே அவருக்கு ஒரு மாஸ் என்ட்ரி இருக்கும். அது எதற்காக என்பதற்கு கடைசியில் வரும் அந்த சண்டைக் காட்சியில் உணர்த்தியிருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

கொலவெறி ஃபைட்
கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதிக்கு இடையே நடக்கும் அந்த தாறுமாறான சண்டைக் காட்சிக்கு முன்னதாக படத்தில் இடம்பெறும் அந்த கொலவெறி சண்டைக் காட்சி ரசிகர்களை மிரட்டி எடுத்து இருந்தது. விக்ரமின் பேரக் குழந்தையை கடத்த வீட்டுக்கு வரும் கும்பலிடம் இருந்து அந்த குழந்தையை காப்பாற்ற வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் ஸ்லீப்பர்செல் ஏஜென்ட் டீனா இரண்டு ஃபோர்க்குகளை வைத்துக் கொண்டு கொலவெறியுடன் போடும் சண்டைக் காட்சி தியேட்டர்களை அதிர வைத்து வருகிறது. படம் வெளியானதும் #AgentTina ஹாஷ்டேக்கும் டிரெண்டானது.

யார் இந்த டீனா
ஏஜென்ட் டீனாவாக நடித்தவர் வேறு யாருமில்லை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உதவி நடன இயக்குநராக பணியாற்றி வரும் வசந்தி தான். கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டருடன் உதவி நடன இயக்குநராக பணியாற்றி வந்த இவர், கடந்த 20 ஆண்டுகளாக தினேஷ் மாஸ்டருடன் உதவி நடன இயக்குநராக பணியாற்றி வருவதாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தினேஷ் மாஸ்டர் தான் காரணம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் தினேஷ் மாஸ்டர் பணியாற்றும் போது தான் லோகேஷ் கனகராஜ் சாரிடம் அறிமுகம் ஆனேன். பல வருடங்களாக திரைக்கு பின்னால் இருந்தாலும், யாருக்கும் நம்மை அடையாளம் தெரியவில்லையே என்கிற ஏக்கம் எனக்குள் இருந்ததை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ இப்படியொரு வாய்ப்பை கொடுத்து என்னை திக்குமுக்காட செய்து விட்டார் என்றார்.

விஜய், அஜித் படத்தில்
பகவதி படத்தில் இடம்பெற்ற 'அல்லு அல்லு' பாடலிலும், வில்லன் படத்தில் இடம்பெற்ற 'அடிச்சா நெத்தியடியை அடிப்பேன்' பாடலிலும் இவர் க்ரூப் டான்சராக நடனமாடி இருப்பார். மேலும், இரு பாடல்களிலும் ஒரே உடையை அணிந்து இவர் ஆடியிருப்பதை கவனித்து நடிகர் விஜய் சுட்டிக் காட்டி சிரித்தார் என்றும் கூறியுள்ளார். வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலான நாங்க வேற மாறி பாடலிலும் இவர் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











