Veera Dheera Sooran: ரிலீஸ் ஆகாத வீர தீர சூரன்.. தயாரிப்பாளர் ரியா ஷிபுவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
சென்னை: விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் வீர தீர சூரன் பாகம் 2. விக்ரமின் 62 வது படமான இந்த படத்தில் விக்ரம் உடன் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படம் முழுக்க முழுக்க ஒருநாள் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் அருண்குமார் தெரிவித்தார்.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த படத்தின் மீது ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்தது. இப்படியான நிலையில் படத்தை, நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் அதன் உரிமையாளரான ரியா ஷிபுவையும் கடுமையாக திட்டி வருகிறார்கள். ஆனால் படத்தின் ரிலீஸில் இந்த வழக்கு மிகப்பெரிய பிரச்னையைக் கொண்டு வந்துவிடும் என யாரும் நினைக்கவில்லை.
வீர தீர சூரன் படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ஆவலாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை எதிர்கொண்டு தியேட்டர் வாசலில் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா என்ற ஏக்கத்தில் உள்ளார்கள். பல தியேட்டர்களில் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். தற்போது படத்தின் ரிலீஸையே நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால், ரசிகர்கள் ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளனர்.

ரியா ஷிபு: பல தியேட்டர்களில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விக்ரம் ரசிகர்கள் பலரும் இணையத்தில் வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளரான ரியா ஷிபுவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதாவது ரியா ஷிபு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் என்றாலும் மலையாளத்தில் ஒரு படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் தமிழில் இவர் தலைமையில் ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் வீர தீர சூரன் பாகம் 2.
ரசிகர்கள் கோபம்: படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, தன்னை பலரும் ரீல்ஸ் செய்யும் பெண் எப்படி படத்தின் தயாரிப்பாளராக முடியும் என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள் என பேசியிருந்தார். இப்போது, வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு, படத்தின் காட்சிகள் இன்று காலை மற்றும் மதியம் என பல்லாயிரக்கணக்கான காட்சிகளுக்கு மேல் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கோபத்தில் ரியா ஷிபுவை கடுமையாக திட்டி வருகிறார்கள்.

உணர்வுகள்: அதாவது, ரசிகர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் எனவும், ரீல்ஸ் எடுப்பது சுலபம் படத்தை தயாரித்து அதை வெளியிடுவது கஷ்டமான விஷயம் என்பதை ரியா ஷிபு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ரியா ஷிபுவை கடுமையாக திட்டி வருகிறார்கள்.

இதனிடையே, இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ஐ.வி.ஒய் என்டர்டையின்மன்ட் நிறுவனம், எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து பேசி சமூகத் தீர்வு காண திட்டமிட்டுள்ளன. மேலும் நீதிபதியிடம் இது தொடர்பாக முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது இன்று பிற்பகல் 3 மணிக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணிக்குள் படத்தின் ரிலீஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், படத்தின் ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகாமல் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மேலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன், இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.
வீர தீர சூரன் படத்தின் ரிலீஸில் உள்ள பிரச்னை என்னவென்றால், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதி செய்யாமல், படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதாக கூறி, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒரு நிறுவனமான, B4U என்ற தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதாவது வீர தீர சூரன் படத்தின் தியேட்டர் ரிலீஸ்க்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
B4U நிறுவனம், படத்தில் முதலீடு செய்த பணத்திற்காக, படத்தின் ஓடிடி உரிமத்தை மொத்தமாக படத்தின் தயாரிப்பாளரராஹா ரியா ஷிபு எழுதிக் கொடுத்துள்ளார். அதாவது தியேட்டர் பிஸ்னஸை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனமும், ஓடிடி பிஸ்னஸை B4U நிறுவனமும் பிரித்துக் கொண்டார்கள். இப்படியான நிலையில்தான், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்வதற்கு முன்னரே, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து, அதற்கான பணிகளையும் செய்துள்ளார்கள், ஜெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தினர். எனவே, படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தீர்மானிக்காமல், தியேட்டர் ரிலீஸ் தேதியை தீர்மானித்ததால், B4U நிறுவனத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் எனவே, படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியைத் தீர்மானிக்காமல், படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என அந்த நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
இந்த வழக்கை முதலில் விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், படத்தை 27ஆம் தேதி காலை 10.30 மணி வரையில் ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டது. இன்றைய முதற்கட்ட விசாரணையில். ஹெச்.ஆர். நிறுவனம் ரூபாய் 7 கோடிகளை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், படத்தின் மொத்த ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனால் படத்தின் காலை காட்சிகளும் மதியக் காட்சிகளும் ரத்தானது.
காட்சிகள் ரத்தானாலும் ரசிகர்கள் தியேட்டரை விட்டுச் செல்லவில்லை. திரையரங்க உரிமையாளர்களிடம் தொடக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் அதன் பின்னர், தியேட்டரை விட்டு வெளியேறாமல், படத்தை பார்த்துவிட்டுத்தான் திரும்புவோம் என அங்கேயே இருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களுக்கு காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்கு நிறுத்தப்படனர். ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டதால், தியேட்டரில் இருந்து ரசிகர்களை விரட்டி அடித்தனர். ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட அடிதடியில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இப்படியான நிலையில், சில ரசிகர்களுக்கு காயமும் ஏற்பட்டது. படம் வெளியாகத விரக்தியில் பல ரசிகர்கள் எம்புரான் படத்தைப் பார்க்கச் சென்றனர் என்ற தகவலும் வந்து கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











