தங்கலான் வேடத்தில் வந்த ரசிகர்கள்.. அனுமதிக்காத திரையரங்க நிர்வாகிகள்.. பரபரப்பான திருச்சி தியேட்டர்
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று அதாவது ஆக்ஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ள படம் தங்கலான். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இன்று ரிலீஸ் ஆகியுள்ள தங்கலான் படம் பார்க்க தங்கலான் வேடத்தில் ரசிகர்கள் வந்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.
தங்கலான் படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் விக்ரம் நடிப்பில் இதுவரை உருவான படங்களிலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்த படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும் என திரைத்துறையினர் அரசியல் கட்சியினர் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், " ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வாழ்த்தில், " மக்களின் வாழ்வியலை பெருவலியோடு சொல்லிவரும் இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள். எப்போதும் நல்ல படங்களுக்கு தன்னை எப்படி வேண்டுமானாலும் வருத்திக்கொள்வார். நாயகன் விக்ரம். தங்கலான் ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும். வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் படம் பெறும் வெற்றி பெற இயக்குநர் மாரி செல்வராஜ், அஜய் ஞானமுத்து, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
தங்கலான் வேடம்: அதேபோல் நடிகர் சூர்யா, கார்த்தி, தனுஷ், ஆர்யா உள்ளிட்ட நடிகர்களும் தங்கலான் படம் வெற்றி பெற வாழ்த்தினர். இந்நிலையில் இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆகின்றது என்றால் அந்த படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் கெட்-அப் போல் உடை அணிந்து ரசிகர்கள் படம் பார்க்க வருவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல் தங்கலான் படத்தினைப் பார்க்க வந்த விக்ரம் ரசிகர்கள் படத்தில் விக்ரம் அணிந்துள்ள வேட்டி, கோமணம் உடை அணிந்து, விக்ரம் கையில் வைத்திருப்பதைப் போலவே கையில் ஒரு கோலுடன் மொத்தம் 6 ரசிகர்கள் வந்தனர். இந்த சம்பவம் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள எல்.ஏ திரையரங்கில் நடந்துள்ளது.

அனுமதி மறுப்பு: தங்கலான் வேடத்தில் வந்த ரசிகர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தங்கலான் படத்தின் பேனருக்கு முன்னர் நின்று ஆக்ரோசமாக கத்தினர். மேலும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவர்களைப் பார்த்த திரையரங்க நிர்வாகத்தினர் கொஞ்ச நேரம் குழப்பத்திற்கு ஆளாகினர். படம் பார்க்க மற்ற ரசிகர்களைப் போல் இவர்களும் வந்தனர். இவர்களை உடனே தடுத்த திரையரங்க நிர்வாகத்தினர், மேலாடை இல்லாமல் படம் பார்க்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். கொஞ்ச நேரம் இவர்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
பரபரப்பு: அதன் பின்னர் தங்கலான் வேடத்தில் வந்திருந்த விக்ரம் ரசிகர்கள் மேலாடை அணிந்து வந்தனர். அதன் பின்னர் அவர்களை படம் பார்க்க தியேட்டர் நிர்வாகத்தினர் அனுமதித்தனர். இதனால் எல்.ஏ திரையரங்கம் கொஞ்ச நேரம் மட்டும் பரபரப்பாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











