கமலுக்கு இத்தனை வில்லன்களா?... அடுத்து என்ன நடக்குமோ?
சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் படம் பற்றி கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு விக்ரம் என டைட்டில் அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக படத்தின் வேலைகள் ஆரம்ப கட்டத்திலேயே நின்றது.
கொரோனா குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கும். தற்போது தான் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

அதிரடி ஆக்ஷன் படம்
ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கான முன்னோட்ட வேலைகளை கமல் ஏற்கனவே துவங்கி விட்டார். இது அதிரடி ஆக்ஷன் படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு அன்பறிவு ஸ்ட்ண்ட் காட்சிகள் அமைக்க உள்ளார்.

தொடரும் வில்லன் பட்டியல்
இந்த படத்தில் ஆரம்பத்தில் லாரன்ஸ் வில்லனாக நடிக்க போவதாக கூறப்பட்டது. பின்பு அவர் விக்ரம் படத்திலிருந்து விலகியதால் அவருக்கு பதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவருடன் மற்றொரு வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார் என கூறினர்.

எத்தனை வில்லன்ப்பா கமலுக்கு
இதைத் தொடர்ந்து கமலுக்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிப்பதாக கூறினார்கள். அடுத்தடுத்த வில்லன்களின் அறிவிப்பால், இந்த படத்தில் அப்படி எத்தனை வில்லன்கள் தான்ப்பா இருக்காங்க என ரசிகர்கள் குழம்ப துவங்கி விட்டனர். இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் படம் பற்றிய மாஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்தது யாருப்பா
அது என்னவென்றால், விக்ரம் படத்தில் கமலுக்கு ஐந்து வில்லன்களாம். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அர்ஜுன் தாஸுடன் நான்காவது வில்லனாக நடிகர் நரேன் நடிக்கிறாராம். ஐந்தாவது வில்லனாக நடிக்க மற்றொரு பான் இந்தியன் ஸ்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

மாஸ் ஆக்ஷனுக்கு ரெடியா
இதனால் கமலின் விக்ரம் படம் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் படம் என்பதால் ஹாலிவுட் ரேஞ்சிற்கு சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமாக அமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











