SSMB29: ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு.. சியான் விக்ரம் முதல் யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க!
ஹைதராபாத்: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டும் இல்லாமல், உலகமே வியந்து பார்க்கும் ஆஸ்கார் விருதினை தனது சகோதரர் வெல்ல உறுதுணையாக இருந்தவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும், பாகுபலி என்ற படத்தின் மூலம் உலகம் கவனிக்கும் இயக்குநராக மாறினார். அதன் பின்னர் இவரது இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர். ஆர் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தெலுங்கு சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இன்றைக்கு உலகமே கவனிக்கின்ற மற்றும் போற்றுகின்ற இயக்குநர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் எஸ்.எஸ். ராஜமௌலி. இவரது அடுத்த படம் நடிகர் மகேஷ் பாபுவுடன் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இதனால், இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதேநேரத்தில் இந்தப் படத்தினை ஒரு பான் வோல்ட் படமாக எடுக்க ராஜமௌலி திட்டமிட்டு அதற்கேற்ற நடிகர்களைத் தேர்வு செய்து வருகின்றார். இதில் இந்திய சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவில் தனக்கென தனி மார்க்கெட் கொண்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிப்பதால் அவர்களின் கால் ஷீட்டிற்காக பல மாதங்கள் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

பெயர்: இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்திற்கு கருடா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தப் பேச்சுகள் ஓய்வதற்கு முன்னர் படத்தில் யார் யார் நடிக்க ஓ.கே சொல்லியுள்ளார்கள் என்ற தகவல் இணையத்தில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலும் வேகமாக பரவி வருகின்றது.

நடிகர்கள்: தற்போது வேகமாக பரவி வரும் தகவலின் அடிப்படையில், மகேஷ் பாபுவின் 29வது படத்தில், தமிழ் திரையுலகில் இருந்து விக்ரம், மலையாள திரை உலகில் இருந்து மோகன் லால் மற்றும் பிருத்விராஜ் நடிக்கவுள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல், தெலுங்கு திரை உலகில் இருந்து நாகர்ஜுனாவும் நடிக்கவுள்ளனர். அதேபோல் பாலிவுட்டில் இருந்து நடிகை தீபிகா படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தீபிகா படுகோனுக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கவுள்ளதால் அவரால் இந்தப் படத்தில் எந்த அளவிற்கு நடிக்க முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அண்மையில் வெளியான கல்கி 2898 ஏ.டி படத்தில் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார்.

வெளிநாட்டு நடிகர்கள்: இந்திய சினிமாவில் இருந்து இப்போதைக்கு இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா இல்லாமல் வெளி நாட்டு சினிமாக்களில் இருந்து இருவர் இந்தப் படத்தில் நடிக்க ஓ.கே. கூறியதாக கூறப்படுகின்றது. அதன்படி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகர் கிரிஸ் ஹெமஸ்வொர்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல், வெளிநாட்டில் இருந்து ஒரு நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒ.கே. சொல்லி உள்ளார் என்ற தகவல் தற்போது தீயாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











