மலேசியாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ’விக்ரம்’..கோலாகலமாகத் கொண்டாடிய மலேசிய ரசிகர்கள்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி மலேசியாவில் கோலாகலமாகத் தொடங்கியது.
மலேசியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள் முதல் காட்சியை ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
இதனிடையே மலேசிய டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் ஏற்பாட்டில் சிறப்புக் காட்சி இன்று காலை ஷா ஆலம் என்ற இடத்தில் உள்ள டிஎஸ்ஆர் திரையரங்கில் நடைபெற்றது.

படம் எப்படி இருக்கு?
தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் திரைக்கதை படுவேகமாக நகர்கிறது. போதைப் பொருள் கடத்தல் கும்பல் அவர்களை விரட்டும் போலீஸ் படை மற்றும் ரா ஏஜெண்ட்டுகள், காணாமல் போகும் கன்சைமண்ட், அதை ஆட்டையைப் போட நினைக்கும் போலீஸ் கருப்பாடுகள் என ஏற்கனவே பார்த்துப் பழகிய கதைக்களம் தான் என்றாலும், அதனை சொல்லிய விதத்தில் கவர்ந்திழுகிறார் இயக்குநர் லோகேஷ். முதல் பாதியில் கமலை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி கண்ணாம்பூச்சி ஆடினாலும் கூட, ஃபகட் பாசிலும், விஜய்சேதுபதியும் தங்களது நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுவிடுகின்றனர். இரண்டாம் பாதியில் கமல் விஸ்வரூபம் எடுக்க கிளைமாக்ஸ் வரை இருக்கையில் நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில் அதிரடி ஆக்சன் தான்.

தணிக்கையில் தப்பித்த முதல் காட்சி
கொடூரமான வெட்டு குத்து, கொலை, தலையை துண்டாக்குதல், கழுத்தை அறுத்தல் என ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கிறது. என்றாலும் மலேசிய தணிக்கை குழுவினரிடமிருந்து அவை தப்பித்து முதல் காட்சி அப்படியே ராவாக திரையிடப்பட்டிருக்கிறது. என்றாலும் அடுத்து வரும் நாட்களில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் வெட்டப்படலாம். காரணம் மலேசிய சட்ட திட்டங்களின் படி அது போன்ற காட்சிகளுக்கு அனுமதியில்லை. இதற்கு இது போல் சில படங்களில் கொடூர காட்சிகள் தணிக்கை செய்யப்பட்டு வெட்டப்பட்டு திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம்
விஸ்வரூபம் திரைப்படத்தின் போது மலேசியாவில் அத்திரைப்படம் திரையிட அனுமதி மறுக்கப்பட்ட போது அங்குள்ள மலேசிய கமல் ரசிகர்களால் தொடங்கப்பட்டது தான் மலேசிய டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம். அதன் பின்னர் கமல்ஹாசனும் அதனை அங்கீகரிக்க தற்போது அதிகாரப்பூர்வ இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஏற்பாட்டில் முதல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஏராளமான கமல் ரசிகர்கள் படத்தினைக் கண்டு ரசித்தனர்.

67 வயது இளைஞர் கமல்
மலேசிய டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கத் தலைவர் இந்திரன் சாகரன் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். 67 வயதில் 30 வயதிற்குண்டான ஸ்டெமினாவோடு கமல் நடித்திருக்கிறார். படம் பார்த்து வெளியே வந்தும் இன்னும் உடம்பு அதிர்கிறது. அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருக்கிறது எனத் தெரிவித்தார். அவ்வியக்கத்தின் செயலாளரும், மலேசியக் கலைஞருமான பாலன்ராஜ் கூறுகையில், நான்கு வருடக் காத்திருப்பிற்குப் பின் இன்று கமல் படம் ரிலீஸ் ஆயிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. படம் பட்டையைக் கிளப்புகிறது. மிக திருப்தியாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











