கேரளாவில் மாஸ் காட்டும் கமலின் விக்ரம்.. மற்ற ஹீரோ படங்கள் எல்லாம் வேடிக்கைதான் பார்க்குதாம்!
கொச்சி : கமல்ஹாசனின் விக்ரம் படம் கடந்த 3ம் தேதி ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்தப் படத்தின் வசூல் சாதனை அனைத்துப் படங்களையும் முந்திக் கொண்டு நடந்து வருகிறது.
சர்வதேச அளவில் மட்டுமில்லாமல் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தப் படத்தின் வசூல் குறிப்பிட்டு சொல்லும்படியாக அமைந்துள்ளது.

கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், மைனா நந்தினி, காயத்ரி, ஷிவானி, மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி தொடர்ந்து 25 நாட்களை நோக்கி வெற்றிகரமாக ஓடி வருகிறது விக்ரம் படம். இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

மிரட்டலான திரைக்கதை
மிரட்டலான மற்றும் சிறப்பான திரைக்கதையுடன் கூடிய விக்ரம் படம் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மொழிப் படங்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வசூல் வேட்டை நடத்திவந்த நிலையில் அந்த நிலையை தற்போது விக்ரம் மாற்றி காட்டியுள்ளது.

ரூ. 400 கோடியை எட்டும் விக்ரம்
திரையரங்குகளில் சர்வதேச அளவில் படம் 400 கோடிகளை எட்டவுள்ளது. தற்போது 385 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ள நிலையில், இந்த வார இறுதியில் படம் மேலும் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்தப் படம் தற்போதுவரை தனிக்காட்டு ராஜாவாக திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது.

வசூல் குறையுமா?
ஆனால் தற்போது பட்டாம்பூச்சி, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில், இந்த வசூல் சிறிது குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் பல மாநிலங்களில் படத்தின் மாஸ் சிறிதும் குறையவில்லை.

கேரளாவில் சிறப்பு
குறிப்பாக கேரளாவில் இந்தப் படம் சிறப்பாக ஓடி வருகிறது. படத்தில் பகத் பாசிலுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை கேரள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவிலும் 4வது வாரத்தை சிறப்பாக துவங்கியுள்ளது விக்ரம் படம். இதுகுறித்து படத்தின் விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் மகிழ்ச்சிப்பதிவை வெளியிட்டுள்ளார்.

ஷிபு தமீன்ஸ் பாராட்டு
இன்னமும் கேரளாவில் மட்டுமே 150 திரையரங்குகளுக்கு மேல் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக தெரிவித்துள்ள ஷிபு, இந்தப் படம் பல சாதனைகளை தகர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். கேரள ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள முதல் தமிழ் படமாக விக்ரம் காணப்படுகிறது.

கமலின் அடுத்தடுத்த திட்டங்கள்
இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பல சாதனைகளை முறியடித்து விக்ரம் வசூல்வேட்டையை நடத்தி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின்மூலம் சிறப்பான ரீ -என்ட்ரியை கொடுத்துள்ளார் கமல்ஹாசன். தொடர்ந்து அவரது அடுத்தடுத்த நடிப்பு மற்றும் தயாரிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











