Thangalaan Box Office: இரண்டே நாளில் 50 கோடி?.. பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பும் தங்கலான்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். கோலார் தங்கவயலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், பார்வதி மற்றும் மாளவிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பசுபதி, ஹரி, அர்ஜுன், டேனியல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் நடித்துள்ளனர். மிகவும் அதிகப்படியான பொருட் செலவில் உருவான இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் விபரம் குறித்து காணலாம்.
தங்கலான் திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இந்தப் படம் வரலாறு, மரபுவழிக் கதைகள், செவிவழிச் செய்திகள், நட்டார் வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கி மாய எதார்த்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க வரலாற்று தகவல்களை மிகவும் நேர்த்தியாக ஒரு திரைப்படத்திற்குள் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர்.

குறிப்பாக இந்தியா முழுவதும் பௌதத்தை நிறுவிய மாமன்னன் அசோகன் பெயர் கொண்ட கதாபாத்திரம் வெட்டி வீசப்பட்ட புத்தர் தலையை முதலில் எடுப்பது தொடங்கி துண்டாட்டப்பட்ட புத்தர் சிலையுடன் அதன் தலையை இணைப்பது என அனைத்து காட்சிகளும் நேரடி அரசியல் காட்சிகள். அம்பேத்கர் கூறியதைப் போல் இந்தியாவின் வரலாறு பார்ப்பனியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள போர் எனக் கூறுவார். இந்த வார்த்தைகளை மிகவும் சரியாக காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர்.
வரலாற்றுப் படம்: ஜனரஞ்சகமான சினிமாவுக்கு என்ன தேவையோ அது இந்த சினிமாவில் இருந்தாலும், எந்த இடத்திலும் தனது கதை சொல்லும் நேர்த்தியில் சமரசம் செய்து கொள்ளாத பா. ரஞ்சித் மற்றும் அவரது குழுவினருக்கும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு வரலாற்றை குறிப்பாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை பார்வையாளர்கள் மனதில் பதியும்படி ஒரு வரலாற்றுப் படம் எடுத்துள்ளார் ரஞ்சித்.

பெருமை: விக்ரம் போன்ற உலகம் போற்றும் கதாநாயகனை மிகச் சிறப்பாக கையாண்டு, அவரின் உழைப்புக்கு பெருமை சேர்த்துள்ளார். உடன் நடித்த பார்வதியின் நடிப்பு என்பது மெச்சிக்கொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக விக்ரம் உடனான ரொமான்ஸ் காட்சியுலும் சரி, முதல் முறையாக ஜாக்கெட் அணியும் காட்சியிலும் சரி, பார்வதியின் முகபாவணைகள் பக்கா.
மாளவிகா மோகனன்: ஆரத்தியாக வரும் மாளவிகா மோகனன் எப்படித்தான் இந்தக் கதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக செய்தார் என்ற கேள்வி இப்போதும் எழுகின்றது. இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் பின்பற்றப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரத்தி கதாபாத்திரம் கொடுக்கும் குரல் மற்றும் சத்தம் எல்லாம் சிறப்பு.

வசூல்: தங்கலான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் மூன்று நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் முதல் இரண்டு நாள் வசூல் விபரம் குறித்து காணலாம். முதல் நாளில் தங்கலான் படம் ரூபாய் 26.44 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் நன்றி தெரிவித்தனர். மேலும் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படம் தங்கலான் தான். இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் ரூபாய் 20 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகின்றது. மொத்தத்தில் படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 48 கோடிகள் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











