ஹீரோவான தயாரிப்பாளர் லலித் குமார் மகன் அக்ஷய் குமார்.. வெளியானது ‘சிறை’ ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள "சிறை" படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்.
கதையின் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, வேலூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இந்த ஆண்டு லவ் மேரேஜ் வெளியானது. விரைவில் அனுஷ்காவுடன் இணைந்து அவர் நடித்துள்ள காட்டி திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில், அந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. இந்நிலையில், அடுத்த படமாக சிறை படத்தின் அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது. டாணாக்காரன் படத்தை போல இந்த படத்திலும் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











