பொங்கல் கிளாஷை விடுங்க.. விக்ரம் பிரபு, அருண் விஜய் மோதல்.. இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி யாருக்கு?
சென்னை: பொங்கலுக்கு வரும் ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்கள் இடையேயான கிளாஷ் தான் சோஷியல் மீடியாவில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் தீப்பற்றி எரிகிறது. அதற்கு முன்னதாக இந்த வாரம் இந்த ஆண்டின் கடைசி பாக்ஸ் ஆபீஸ் கிளாஷாக விக்ரம் பிரபு மற்றும் அருண் விஜய் மோதுகின்றனர்.
தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் ஹீரோவாக அறிமுகமாகும் சிறை படமும் அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல படமும் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ரிலீஸாக நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கடந்து புத்தாண்டு விடுமுறையும் அரையாண்டு விடுமுறையும் உள்ள நிலையில், இந்த 2 படங்களும் சிறப்பாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டல்லடித்த டிசம்பர்: இந்த டிசம்பர் மாதம் கார்த்தியின் வா வாத்தியார் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்களை ரசிகர்களை தாண்டி திரையரங்க உரிமையாளர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், கடைசியில், அந்த 2 படங்களும் வெளியாகவில்லை. பாலகிருஷ்ணாவின் அகண்டா 2வும் பெரிதாக ஓடவில்லை. அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படம் மட்டுமே கொஞ்ச தியேட்டர்களை காப்பாற்றி வருகிறது.
பொங்கல் முதல் கிறிஸ்துமஸ் வரை: டிசம்பர் மட்டுமின்றி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான பல புதிய படங்களும் தோல்வியை தழுவின. விஷாலின் மத கஜ ராஜா மட்டுமே வசூலை வாரிக் கொடுத்தது. நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் இந்த ஆண்டு ஜனவரிக்கு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து மிரட்டியிருந்தார். ஆனால், பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை அந்த படம் பண்ணவில்லை. இந்நிலையில், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அவர் தனது ரெட்ட தல படத்தை களமிறக்குகிறார்.
வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம்: கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெற்றியாக வேண்டி வெண்ணங்கொடு முனியப்பன் கோவிலில் நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இன்னானி உள்ளிட்ட படக்குழு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

விக்ரம் பிரபு vs அருண் விஜய்: சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்துள்ள சிறை திரைப்படமும் நாளை வெளியாகிறது. ஏற்கனவே படத்தின் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்ட நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ரெட்ட தல மற்றும் சிறை உள்ளிட்ட படங்கள் இம்மாத இறுதியிலாவது தமிழ் சினிமாவுக்கு வெற்றிப் படங்களாக அமைந்தால் நல்லது என்றே சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். இந்த இருவரில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை யார் அதிகம் ஈட்டவுள்ளனர் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











