காட்சிகள் ரத்து.. ஏமார்ந்த ரசிகர்கள்.. ரிலீஸ் ஆகுமா வீர தீர சூரன்? சம்பளத்தை விட்டுத் தரும் விக்ரம்?
சென்னை: அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் பாகம் 2. இந்த படத்தில் சியான் விக்ரம், நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். படம் தற்போது வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், காலை காட்சிகளும் மதியக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஹெ.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் ஷிபு தமீன்ஸ் தொடக்கத்தில் படத்தை B4U என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். அதன் பின்னர் படத்தை முழுவதுமாக தானே ரிலீஸ் செய்ய, அந்த B4U என்ற நிறுவனத்திற்கு படத்தின் ஓடிடி உரிமத்தை எழுதிக் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதி செய்யாமல் படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதியை அறிவித்து, படத்தை ரிலீஸ் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்றதால், B4U நிறுவனம் படத்தின் ரிலீஸ்க்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.

வழக்கு: இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, ரூபாய் 7 கோடிகளை டெபாசிட் செய்யவும், படத்தின் மொத்த ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், படத்தின் காலை நேர காட்சிகளும், மதிய நேர காட்சிகளும் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆவலோடு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஏமாற்றம்: இதனால் ரசிகர்கள் கோபம் அடைந்து, தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் சில இடங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலர், வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தை சமூக வலைதளப் பக்கங்களில் கடுமையாக சாடி வருகிறார்கள். அதாவது, எக்காரணம் கொண்டும் ரசிகர்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுக் கொண்டு இருப்பவர் படம் தயாரித்தால் இப்படித்தான் ஏதாவது குளறுபடி நடக்கும் எனவும் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

விக்ரம்: அதேபோல், சினிமா வட்டாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள், டெல்லி நீதிமன்றம் கூறியதைப்போல் ரூபாய் 7 கோடிகளை தங்களது சம்பளத்தில் இருந்து கொடுக்க, விக்ரம், எஸ்.ஜே. சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் அருண் குமார் உள்ளிட்டோர் தங்களது சம்பளத்தில் இருந்து கொடுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் இன்று மாலை அல்லது இரவு கட்டாயம் திரையிடப்படும் எனவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் படத்தின் முதல் நாளில் முதல் காட்சியைப் பார்க்க ஆவலாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வீர தீர சூரன் பாகம் 2 ரிலீஸ் ஆகாதது, திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சண்டையாக மாறியது. இதனால் சிலர் காமடைந்தனர். ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் உடனே காவலர்கள் வரவழைக்கப்பட்டு, ரசிகர்களை தியேட்டரில் இருந்து வெளியேற்றினர்.


Click it and Unblock the Notifications











