கோப்ரா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சீயான் விக்ரமுக்கு கிடைத்த செம்ம ஓப்பனிங்
சென்னை: விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'கோப்ரா' படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
கோப்ரா படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பால், முதல் நாள் வசூலிலும் சாதனை படைத்துள்ளது கோப்ரா.

பிரம்மாண்டமாக வெளியான கோப்ரா
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தரமான படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். விக்ரம், அஜய் ஞானமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் என மெகா கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவானது கோப்ரா. ஆக்சன் திரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இருப்பினும் தமிழகத்தில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் தரமான வசூல்
உலகம் முழுவதும் 1300 ஸ்க்ரீன்களில் கோப்ரா படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 14 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது விக்ரம் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஓப்பனிங் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அஜித்தின் வலிமை முதல் நாளில் 36 கோடியும், விஜய்யின் பீஸ்ட் 27 கோடியும், கமலின் விக்ரம் 20 கோடியும் வசூலித்திருந்தன. இதனையடுத்து விக்ரமின் கோப்ரா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் வசூல் நிலவரம்
கோப்ரா திரைப்படம் தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படம் வெளியாகும் முன்னர் கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கோப்ரா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதானால் வெளிமாநிலங்களிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அதன்படி, ஆந்திராவில் 4 கோடியும், கேரளாவில் 2 கோடியும், கர்நாடகாவில் 3.5 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் மட்டும் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்சாகத்தில் கோப்ரா டீம்
கோப்ரா படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இருந்தாலும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால், இந்தியா முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது கோப்ரா. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறப்பான ஓப்பனிங் கிடைத்துள்ளதால் நடிகர் விக்ரம் குஷியாக காணப்படுகிறார். அதேபோல் இயக்குநர் அஜய் ஞானமுத்து உட்பட 'கோப்ரா' படக்குழுவினரும் செம்ம உற்சாகமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











