என் வாய்ப்பை அந்த ஹீரோ கெடுத்துட்டார்.. துரோகி... மதயானை கூட்டம் விக்ரம் சுகுமாரன் கொதிப்பு
சென்னை: மதயானை கூட்டம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் விக்ரம் சுகுமாரன். அதுமட்டுமின்றி ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் இயக்கியபோது முழுக்க முழுக்க உடன் இருந்தது விக்ரம்தான். அவர் கடைசியாக இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அதில் சாந்தனு, பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தச் சூழலில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விக்ரம் சுகுமாரன். வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான இவர் ஆடுகளம் படத்துக்கு கள ஆய்வு செய்தது, பல வேலைகளை செய்தவர். அதுமட்டுமின்றி மதயானைக்கூட்டம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் கவனம் ஈர்த்த மதயானைக்கூட்டம்: மதயானைக்கூட்டம் படமானது கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடக்கும் மொய் விருந்து பற்றியும், உறவுகள் பற்றியும், அதற்குள் எழும் சிக்கல்கள் பற்றியும் படு ராவாக படத்தை உருவாக்கியிருப்பார் விக்ரம் சுகுமாரன். வசூல் ரீதியாக அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை பேசுவதாக அந்தப் படத்தின் மீது சிலர் விமர்சனம் வைத்தனர்.
வாழ்வியல் படம்தான்: ஆனால் அது சாதிய படமில்லை வாழ்வியல் படம்தான் என ஒரு தரப்பினர் கூறினர். படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் அட்டகாசமாக அமைந்திருக்கும். உதாரணமாக கதிரை கலையரசன் தனது வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு வரும்போதும்; அப்போது தனது உறவினர்களை ஜாடை மாடையாக பேசும் காட்சி இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தக் காட்சியை அவ்வளவும் நேட்டிவிட்டியாக படமாக்கியிருப்பார் விக்ரம் சுகுமாரன்.
இராவண கோட்டம்: மதயானை கூட்டத்திற்கு பிறகு படம் ஏதும் இயக்காமல் இருந்த விக்ரம் சுகுமாரன் சாந்தனுவை வைத்து இராவண கோட்டம் படத்தை ஆரம்பித்தார். இதில் கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த வருடம் படம் வெளியானது. மதயானைக்கூட்டம் கொடுத்த இயக்குநரின் படம் என்பதால் இப்படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படமோ படுதோல்வியை சந்தித்தது. இப்போது அவர் எந்த படமும் இயக்காமல் இருக்கிறார்.
விக்ரமின் பதிவு: இந்நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "மதயானை கூட்டம் படத்தை இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறு பட வாய்ப்பு எதுவும் வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்திருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். அவன் வேறு யாருமல்ல அவனை நான் நடிகனாக்கினேன். பச்சை துரோகி.. என் எதிரிக்கு கைகூலியாக செயல்பட்டிருக்கிறான். இதை கேட்டதிலிருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து விக்ரம் சுகுமாரன் சொல்லும் ஹீரோ யாராக இருப்பார் என்று ரசிகர்கள் ஆராய தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











