விக்ரம் ஒரு பார்வை..வில்லன்களாக மாறும் முன்னணி ஹீரோக்கள்..உடைகிறதா தமிழ் சினிமா மரபு?
சென்னை: தமிழ் சினிமாவில் தனித்தனியாக ஹீரோக்கள் நடித்து வந்த காலம் போய் ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் காலம் வந்துள்ளது.
மற்ற மாநில மொழிப்படங்களில் ஹீரோக்கள் ஈகோ பார்க்காமல் சேர்ந்து நடிப்பது சகஜமான ஒன்றாக இருந்து வந்தது. தமிழ் சினிமாவில் அது இல்லை.
தமிழ் சினிமாவில் ஹீரோ மாஸ்-ஐ மெயிண்டெய்ன் பண்ண வேண்டும் என்பதற்காக சேர்ந்து நடிக்காமல் இருந்த முன்னணி ஹீரோக்கள் சமீபகாலமாக முன்னணி மற்ற ஹீரோக்கள் படங்களில் சேர்ந்து நடிப்பது வாடிக்கையாகி வருகிறது.

அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை நடிகர்களின்
தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா, எம் ஜி ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என்று தொடர்ச்சியாக இரு உச்ச நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். சமீப காலமாக சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என பல நடிகர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர்.

எம்ஜிஆர்-சிவாஜி
தமிழ் சினிமா 50,60-கள் காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு பெரும் உச்ச நட்சத்திரங்கள் நடித்த பொழுது அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. இருவர் பக்கமும் இரு வேறு ரசிகர்கள் கூட்டம் மிகப் பெரிய ஜாம்பவான்கள் என்கிற நிலையில் இருவரும் இணைந்து நடித்தால் சரியாக இருக்காது என்பதால் தனித்தனி படங்களில் நடித்து வந்தனர்.

ஹீரோ மாஸ் தனித்து நடிக்கும் நடிகர்கள்
ஆனால் அடுத்த கட்ட நடிகர்களான ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், முத்துராமன், சிவகுமார் போன்ற நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் ஓரிரு படங்களில் நடித்துள்ளனர். எம்ஜிஆர்- சிவாஜி காலத்திற்குப் பிறகு 80-களில் தலையெடுத்த ரஜினி-கமல் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து ஒன்றாக நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க தொடங்கினார். இதனால் அவர்கள் இருவரும் வேறு வேறு பாதையில் உச்ச நட்சத்திரமானார்கள்.

ரஜினி கமல் எடுத்த முடிவு
இதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தோம், அது எங்களுடைய திரைப்பட வாழ்க்கையை புரட்டிப் போட்டது" என்று தெரிவித்திருந்தார். இருவரின் ரசிகர்களும் வேறு வேறு வகையிலான நடிப்பை இருவரிடமும் எதிர்பார்ப்பதால் தனித்தனியாக இருவரும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்றிருந்தனர். இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று இரு தரப்பு ரசிகர்களும் கோரிக்கை வைத்தாலும் அது நடக்காமலே இருந்துவருகிறது.

மாஸ் ஹீரோக்கள் கடைபிடிக்கும் பழைய மரபுகள்
ரஜினி-கமலுக்கு பிறகு திரைப்படத்துறையில் முன்னணி நட்சத்திரங்களாக வந்தவர்கள் விஜய்-அஜித். ஆரம்பத்தில் சில படங்களில் ஒன்றாக நடித்தனர். பின்னர் இருவரும் தனித்தனியாக ரசிகர் கூட்டம், தனித்தனி இமேஜ் என தனித்தனியாக பிரிந்து விட்டனர். எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி- கமலுக்கு இல்லாத அளவு விஜய்-அஜித் ரசிகர்கள் தனித்தனியே சண்டையிட்டுக் கொள்வது அதிகம். அவரவர் வளர்ச்சிக்கேற்ற சோசியல் மீடியாக்களில் இருவரும் மோதிக் கொள்வது என்பது வாடிக்கையாக உள்ளது. அஜித் விஜய் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது. சமீபத்தில் வெங்கட்பிரபு ரஜினி விஜய் அஜித் இருவரையும் வைத்து படம் எடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.

மற்ற மொழி படங்களில் இணைந்து நடிக்கும் ஹீரோக்கள்
இதற்கிடையில் மற்ற மொழி படங்களில் மிகப்பெரும் பிரபல இந்தி நடிகர்களும் சரி, மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் முன்னணி நட்சத்திரங்கள் ஈகோ பார்க்காமல் இணைந்து நடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் சாய்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து ராஜமௌலி படத்தில் நடித்தது மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதுபோன்று இந்தியிலும் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. மலையாளத்திலும் இதே போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஆனால் தமிழில் ஏனோ இது நடக்காமலேயே இருந்து வந்தது.

தமிழ் சினிமா ஹீரோ ஒர்ஷிப் மரபை உடைக்கும் விஜய் சேதுபதி
இந்த மரபை முதன் முதலில் உடைத்தவர் நடிகர் விஜய்சேதுபதி எனலாம். இமேஜ் என்ற ஒன்றை பார்க்காமல், அதுபற்றி கவலைப்படாமல் பாத்திரங்களை மட்டும் மனதில் வைத்து நடிப்பதை வழக்கமாக அவர் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாகவும், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாகவும் வந்து கலக்கினார். தற்போது விக்ரம் படத்திலும் வில்லன் ரோலில் ஆதிக்கம் செலுத்தி உள்ளார்.

விக்ரம் படத்தில் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமாக விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி அல்லாமல் ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ளார். அதேபோன்று கடைசி காட்சியில் சில காட்சிகளில் சூர்யா வருகிறார். அவரும் இந்தப் படத்தில் வில்லன் போன்ற தோற்றத்தில் வருகிறார். இதன் மூலம் தமிழக நடிகர்கள், தமிழ் திரையுலகில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழி படங்களில் போல் தமிழிலும் கௌரவம் பார்க்காமல் நடிகர்கள் இணைந்து நடிப்பது அதிகமாகி வருகிறது தெரிகிறது.

தனி நபர் ஹீரோ ஒர்ஷிப் படங்களால் பெருகும் வன்முறைக்கதைகள்
கதையை மையமாகக் கொண்டு அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து நடிப்பது. பெரிய திரைக்கதைகள் அல்லாமல் சிறிய சம்பவங்களை வைத்து படங்களை இயக்குவது சமீப காலமாக நடந்து வருகிறது. அதே சமயம் ஹீரோ வர்ஷிப் எனப்படும் ஹீரோக்களை சுற்றி எழுதப் படுகின்ற கதைகள், படங்களால் வன்முறைக் கதைகள், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகுதல், குடும்ப உறவுகள் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

பான் இந்தியா கலாச்சாரம் காரணமா? மரபை உடைப்பது காரணமா?
அதே நேரம் கதாநாயன், ஹீரோ இமேஜ் உடைக்கப்படுவதில் கவனம் செலுத்தும் முன்னணி ஹீரோக்கள் இதை மரபை உடைக்க செய்கிறார்களா? வியாபார யுக்திக்கு செய்கிறார்களா என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது. புதிதாக பான் இந்தியா கலாச்சாரம் மூலம் வியாபார யுக்திக்காக இவ்வாறான நகர்தல் உள்ளது என்கிற விமர்சனத்தையும் புறக்கணிக்க முடியாதுதான்.


Click it and Unblock the Notifications











