Veera Dheera Sooran Box Office: ஈவினிங் தான் ஷோ போட்டாங்க.. பாக்ஸ் ஆபிஸில் வெய்ட் காட்டிய விக்ரம்
சென்னை: விக்ரம். எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் என பலர் இணைந்து நடித்து வெளியாகியுள்ள படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படத்தின் முதல் பாகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நேரடியாகவே படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் பலகட்ட சட்ட போராட்டங்களுக்குப் பின்னர் நேற்று மாலை தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படி இருக்கும்போது, படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
விக்ரமின் தீவிர ரசிகரான அருண்குமார் விக்ரமிற்கு இந்த கதையை உருவாக்கி படத்தை எடுத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் நேற்று காலையில் இருந்தே திரையிடப்பட்டு இருந்தால் வசூலிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் படம் நேற்று மாலை தான் முதல் காட்சி திரையிடப்பட்டது, அது வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது படத்தை தயாரித்த ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனமும், B4U நிறுவனமும் தங்களுக்குள் தனி ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால் வந்த விளைவுதான் படத்தை நேற்று காலையில் ரிலீஸ் செய்யாமல் போனதற்கு காரணம். அதாவது, படத்தை இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் படத்தின் மொத்த தியேட்டர் ரிலீஸ் அதன் மூலம் ஈட்டும் வருவாயை ஹெச்.ஆர். நிறுவனம் கையாளுவதாகவும் , படத்தின் ஓடிடி ரிலீஸ் மூலம் கிடைக்கும் வருவாயை B4U நிறுவனம் கையாளுவதாகவும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.

பிரச்னை: இதில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதி செய்யாமல், தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்ததால், B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்தது. இப்படியான நிலையில் படத்தை நேற்று காலை 10.30 மணி வரை திரையிட தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எப்படியும் படத்தை காலை 10.30 மணிக்கு மேல் திரையிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தார்கள்.
போராட்டம்: நேற்று காலை இந்த வழக்கில், படக்குழு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரூபாய் 7 கோடிகள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் படம் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அதன் பின்னர் படத்தை 4 வாரங்களுக்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள், பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். மேலும், படத்தை இன்று ரிலீஸ் செய்ய படக்குழு தரப்பில் அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது, இறுதியாக டெல்லி நீதிமன்றம் படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கியது. அதன் பின்னர் படத்திற்கான காட்சிகளுக்கு திரையரங்குகளில் நேரம் ஒதுக்கப்பட்டது.

வசூல்: பெரும்பாலான தியேட்டர்களில் இரண்டு காட்சிகள் நேற்று திரையிடப்பட்டது. பல திரைகளை கொண்ட தியேட்டர்களில் மட்டும் காட்சிகள் அதிகமாக திரையிடப்பட்டது. இது வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 3.75 கோடிகளை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் தகவல்களை வெளியிடும் சாக்நிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொறுப்பு துறப்பு: படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பெறப்பட்ட தகவலே தவிர, படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் விபரம் அல்ல.



Click it and Unblock the Notifications











