Veera Dheera Sooran BO: ரிலீஸில் ஏற்பட்ட பிரச்னை.. பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாமல் திணறும் வீர தீர சூரன்
சென்னை: விக்ரம், எஸ்.கே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் என பலர் நடிப்பில் உருவாகி கடந்த 27ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வீர தீர சூரன் பாகம் 2. அருண் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை ஹெச். ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி இன்றோடு அதாவது மார்ச் 29 ஆம் தேதியுடன் மூன்று நாட்கள் ஆவதால், முதல் இரண்டு நாட்கள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வீர தீர சூரன் பாகம் இரண்டு படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி. அதாவது ஒரு படத்தின் முதல் பாகம் வெளியாகாமல், நேரடியாக இரண்டாம் பாகம் வெளியாவது என்பது இதுவே முதல் முறை. மேலும் இந்த படத்தின் கதை ஒரு நாள் இரவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது, படம் தொடங்கியதில் இருந்து கடைசி வரை மிகவும் பரபரப்பாக நகர்கிறது. படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இந்த படம் விருந்து என்றே கூறலாம்.

பாராட்டு: அதேபோல், படத்தை பொறுத்தவரையில், நடித்த நடிகர்கள் அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு சிறப்பாகவும் மற்றவர்களை விட வித்தியாசப்பட்டு நிற்கிறது. படத்தின் பல காட்சிகள் ரசிகர்கள் மனதில் மிகவும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்த காரணம், ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையைக் கூறலாம். ஏற்கனவே விக்ரமின் தெய்வத்திருமகள், தாண்டவம், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பான இசையை அமைத்துக் கொடுத்தது போல், இந்த படத்திற்கும் உலகத் தரமான இசையை கொடுத்துள்ளார். அவரது இசை படத்துக்கு பெரிய பலம். படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வந்தாலும், வசூலில் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பிரச்னை: அதற்கு காரணம் படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகளும், அதைத் தீர்க்க நடத்தப்பட்ட போராட்டங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. படத்தை காலை 9 மணி காட்சிகளில் பார்க்க தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் படம் காலை 9 மணிக்கு வெளியாகவில்லை. மேலும் படத்தை வெளியிடக் கூடாது என தொடுக்கப்பட்ட வழக்கில், படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட தடை என்ற உத்தரவும் நீதி மன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.
வசூல்: அதன் பின்னர் சட்டப் போராட்டங்கள் நடைபெற்று, படத்தை 27ஆம் தேதி மாலையில் ரிலீஸ் செய்தார்கள். இதன் காரணமாக வீர தீர சூரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அடி வாங்கியது. படம் முதல் இரண்டு நாட்களில் சுமார் ரூபாய் 6.65 கோடிகளை வசூல் செய்ததாக சாக்நிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கையோடு உள்ளது.

பொறுப்பு துறப்பு: படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பெறப்பட்ட தகவலே தவிர, படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் விபரம் அல்ல.


Click it and Unblock the Notifications











