சினிமா கொண்டாடும் படமாக இருக்கும்.. எஸ்டிஆர் 48 குறித்து தங்கலான் கலை இயக்குநர் மகிழ்ச்சி!
சென்னை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் தங்கலான். சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முற்றிலும் படம் செட்டுகள் போடப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
படத்தின் கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தி இந்த படம் குறித்து தன்னுடைய பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் அவரது 50வது படம் என்பது கூடுதல் சிறப்பு. தங்கலான் படத்தில் இருந்து வெளியில் வருவதற்கு தனக்கு ஆறு மாத காலங்கள் பிடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து எஸ்டிஆர் 48 உள்ளிட்ட இரண்டு பீரியட் படங்களில் தான் இணைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தங்கலான் படம்: நடிகர் விக்ரம் தொடர்ந்து தன்னுடைய கேரக்டர்களை மிகவும் சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது தங்கலான் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் மிரட்டலான கெட்டப்புடன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்களும் மிரட்டலாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் கேஜிஎஃப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கலான் கலை இயக்குநர்: தங்கலான் படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் எஸ்எஸ் மூர்த்தி. அவர் தொடர்ந்து படம் குறித்த பல்வேறு விஷயங்களை பிரமோஷனின்போதும், தற்போதும் பகிர்ந்து வருகிறார். இயக்குனர் ரஞ்சித்துடன் பணியாற்றுவது மிகவும் எளிதாக இருந்ததாக மூர்த்தி முன்னதாக தெரிவித்திருந்தார். தானும் ஓவிய கல்லூரி மாணவன் மற்றும் பா ரஞ்சித்தும் ஓவியக் கல்லூரி மாணவர் என்ற வகையில் இருவருக்குமான புரிதல் மிகச்சிறப்பாக அமைந்திருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். தங்கலான் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் ஏறக்குறைய செட் போடப்பட்டு படமாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
கலை இயக்குநரின் 50வது படம்: படத்திற்கான செட் குறித்து முன்னதாக பா ரஞ்சித்துடன் ஆலோசனை மேற்கொண்டு அதை ஓவியமாக வரைந்து அவரிடம் தந்து விடுவேன் என்றும் அதில் அவர் கூறும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு அதை மினியேச்சர்களாக உருவாக்குவேன் என்றும் இதனால் அந்த செட்களை உருவாக்குவது மிகவும் எளிதாக அமைந்ததாகவும் மூர்த்தி தெரிவித்துள்ளார். தங்கலான் படம் கலை இயக்குனர் மூர்த்திக்கு 50 வது படமாக அமைந்துள்ளது. படத்தில் அவரது உழைப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக இரண்டு வரலாற்றுப் பின்னணியிலான படங்களில் தான் இணைந்துள்ளதாக மூர்த்தி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் எஸ்டிஆர்48 படம்: சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தில்தான் இணைந்துள்ளதாகவும் இந்த படம் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் மூர்த்தி கூறியுள்ளார். இந்த படம் பாகுபலி டைப்பில் உருவாக உள்ளதாகவும் எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் இணைந்து ஒரு படத்தை இயக்கினால் அந்த படம் எப்படி இருக்குமோ அப்படி எஸ்டிஆர் 48 படம் உருவாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். இதே போல ப்ளூ ஸ்டார் படத்தின் இயக்குனர் ஜெயக்குமாருடன் இணைந்து அடுத்ததாக மேலும் ஒரு பீரியட் படத்தில் இணைய உள்ளதாகவும் மூர்த்தி தெரிவித்துள்ளார். தங்கலான் படம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் மூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தில் இருந்து வெளியில் வருவதற்கு தனக்கு ஆறு மாதங்கள் பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











