Thangalaan - தங்கலான் ஷூட்டிங் நிறைவு.. விக்ரம் கொடுத்த அப்டேட்
சென்னை: Thangalaan (தங்கலான்) தங்கலான் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அவர் இயக்கியதிலேயே மோசமான விமர்சனத்தை சந்தித்த படமாக அது அமைந்தது. மெட்ராஸ், அட்டகத்தி போன்ற அருமையான கதைகளை எழுதிய இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது மாதிரி ஒரு கதையை எழுதியிருக்கவே கூடாது. முகநூலில் நடக்கும் உரையாடல் போல் படம் நெடுக வாடை அடித்ததாக ஓபனாக பேசினர் ரசிகர்கள்.

தங்கலான்: இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது அடுத்த படமாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்க கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார். எப்போதும் வித்தியாசமாக கதை தேர்வை செய்யும் விக்ரம் பா.இரஞ்சித்துடன் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
மேக்கிங் வீடியோ: ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தங்கலான் அமையும் என்பதை அதன் மேக்கிங் வீடியோ உணர்த்தியது. அதனைப் பார்த்த ரசிகர்கள் விக்ரம் சும்மாவே அசுரத்தனமாக உழைப்பார். இப்போது பா.இரஞ்சித்தோடு வேறு இணைந்திருக்கிறார். சொல்லவா வேண்டும். படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகி விக்ரமுக்கு இருக்கும் தோல்வி முகத்தை மாற்றும் என கமெண்ட்ஸ் செய்தனர்.
கதை என்ன?: கோலார் தங்க வயலில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல்தான் கதை என கூறப்படுகிறது. கேஜிஎஃப்பில் அவர்கள் இருந்தபோது எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை இரஞ்சித் ரத்தமும், சதையுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தை ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
ஷூட்டிங்: பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடந்த சூழலில் ரிகர்சலின்போது விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் சில வாரங்களுக்கு ரெஸ்ட்டில் இருந்தார். காயத்திலிருந்து முழுதாக மீண்டதை அடுத்து தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை மதுரையில் தொடங்கினார் இரஞ்சித். அப்போது விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் ட்ரெண்டாகின.
தங்கலான் அப்டேட்: இந்நிலையில் தங்கலான் படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் விக்ரம் வெளியிட்டிருக்கிறார். அதுகுறித்து இரஞ்சித், பார்வதி ஆகியோருடன் ஷூட்டிங் தொடங்கிய முதல்நாள் எடுக்கப்பட்ட படத்தையும்; ஷூட்டிங்கின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஷூட்டிங் முடிந்தது. மிகவும் அற்புதமானவர்களுடன் பணியாற்றினேன்.
ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான அனுபவங்களை பெற்றேன். முதல் புகைப்படத்திற்கும் கடைசி புகைப்படத்திற்கும் இடையே வெறும் 118 நாட்கள் மட்டும்தான் வேலை இருந்தது. இந்தக் கனவை நனவாக்கிய இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். படமானது அடுத்த வருடத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











