Vimal: "நான் கூப்பிட்டா யாரும் வர மாட்டாங்க... சரக்கடிச்சு 45 நாள் ஆச்சு..": உண்மையை சொன்ன விமல்!
சென்னை: களவாணி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல்.
கடந்தாண்டு விமல் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது அவர் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
இந்நிகழ்ச்சியில் பேசிய விமல், "நான் கூப்பிட்டா யாரும் வர மாட்டாங்க" என பேசியது வைரலாகி வருகிறது.
நான் கூப்பிட்டா யாரும் வரமாட்டாங்க: ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விமல். பசங்க படத்தில் ஹீரோவாக என்ட்ரியான விமலுக்கு 'களவாணி' மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது. சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. விமலுடன் ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்த யாஷ், இன்று கேஜிஎஃப்-இல் நடித்து பான் இந்தியா சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். ஆனால் விமலின் கேரியரில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. வாகை சூட வா, தேசிங்கு ராஜா, மன்னர் வகையறா, களவாணி 2, கன்னி ராசி என பல படங்களில் நடித்துவிட்டார். இருப்பினும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் விமல்.
இந்நிலையில் கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸ், விமலுக்கு சிறப்பான கம்பேக்காக அமைந்தது. ஜீ5 ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த வெப் சீரிஸ், விமலுக்கு மீண்டும் பட வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தது. அதன்படி தற்போது அவர் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய விமல், தனது கேரியர் குறித்து மனம் திறந்தார்.
அதாவது சினிமாவுக்கு வந்த புதிதில் பலரை நம்பி ஏமாந்ததால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. கொரோனாவுக்குப் பிறகு சுத்தமாக நடிப்பதற்கு சான்ஸ் கிடைக்கவில்லை. அப்போது தான் விலங்கு வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வெற்றியால் தான் துடிக்கும் கரங்கள் படத்தில் நடிக்கவும் சான்ஸ் கிடைத்தது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு யாரை அழைப்பது என்றே தெரியவில்லை.
இயக்குநர் என்னிடம் யாரையாவது சிறப்பு விருந்தினராக அழைக்க முடியுமா என்றார். கண்டிப்பாக நான் கூப்பிட்டால் யாரும் வரமாட்டார்கள் எனக் கூறிவிட்டேன். இப்போதையை நிலையில் இது தான் எனது மார்க்கெட். சரக்கடித்தே 45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இனிவரும் நாட்களில் அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறேன் என விமல் மனம் திறந்து பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











